தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலில் வேட்பாளர்களின் மனுவில் கையெழுத்து போடுவது யார்? உட்கட்சி பூசலால் அதிமுகவினர் சுயேட்சையாக போட்டியிட முடிவு

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனு படிவத்தில் கையெழுத்து போடப்போவது யார் என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் வேட்பாளர்கள் சுயேட்சைகளாக போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர்கள், 2 நகராட்சி கவுன்சிலர்கள், 8 பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இந்த பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய 27ம் தேதி (நேற்று) கடைசி நாள் ஆகும். அதன்படி அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்தந்த கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ‘ஏ’ மற்றும் ‘பி’ என்ற இரண்டு படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவங்களில் அந்தந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கையெழுத்து போட வேண்டும். அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்ட பின்னர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேட்புமனு படிவங்களில் கையெழுத்திட்டு வந்தனர்.

தற்போது அதிமுகவில் உட்கட்சி பூசல் சர்ச்சையினால் ஒருங்கிணைப்பாளர்களின் பதவிகள் காலாவதியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த படிவத்தில் யார் கையெழுத்து போடுவார்கள் என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவங்களை வேட்புமனுக்கள் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான 30ம் தேதிக்குள் (நாளை மறுதினம்) சமர்ப்பிக்க வேண்டும். அன்றைய தினம் மாலை 3 மணிக்குழு இந்த படிவங்களை வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேணடும். இல்லையென்றால் அவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் அல்லது சுயேட்சை வேட்பாளர்களாகத்தான் போட்டியிட முடியும்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறினாலும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால், இந்த மனுவில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடுவாரா, இதை மாநில தேர்தல் ஆணையம் அங்கீகரிக்குமா அல்லது சுயேட்சை வேட்பாளர்களாக அதிமுகவினர் போட்டியிடுவார்களா என்பது 30ம் தேதிதான் தெரியவரும். கட்சி தலைமை கையெழுத்து ேபாட்டால்தான் அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பலர் தற்போது சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்து மனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: