மதுரையில் முதலீடு செய்த 484 பேரிடம் சென்னையை சேர்ந்த கும்பல் ரூ.2.75 கோடி பிட்காயின் மோசடி: கலெக்டரிடம் பெண் புகார்

மதுரை: மதுரை, நாகமலை புதுக்கோட்டை ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் அனுராதா (41).  இவர் நேற்று கலெக்டர் அனீஷ் சேகரிடம் புகார் மனு கொடுத்தார். மனுவில் கூறியிருப்பதாவது: நான் டைல்ஸ் கடையில் வேலை பார்த்துக்கொண்டே, வீட்டில் மசாலா பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தேன். எனது பொருட்களை இணையதளம் மூலம் விற்பனை செய்து வந்தேன். இதனை அறிந்த சென்னை, பெருங்களத்தூரை சேர்ந்த ஐஸ்வர்யா அறிமுகம் ஆனார். அவர், தனக்கு சென்னையில் உள்ள பிட் காயின் முதலீட்டு நிறுவனத்துடன் தொடர்பு உள்ளதாகவும், இதில் முதலீடு செய்து, அதிக லாபம் சம்பாதிப்பதாகவும் கூறினார். பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும் உறுதியளித்தார்.

இதை நம்பி, வங்கியில் கடன் வாங்கி முதலில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தேன். இதில் மாதம் ரூ.15,435 வீதம் 6 மாதங்கள் மட்டுமே கொடுத்தனர். பிறகு பணம் தரவில்லை. முதலீடு பணம் பற்றி கேட்டபோது, வருமான வரித்துறை பிரச்னை உள்ளது; வேறொரு நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் எனக்கூறி, சென்னையின் மற்றொரு நிறுவனத்தை சேர்ந்த இருதயராஜ் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். மீண்டும் நான் வங்கியில் கடன் வாங்கி, பிட் காயின் முதலீடாக ரூ.8 லட்சத்தை இந்நிறுவனத்தில் முதலீடு செய்தேன். மேலும் நீங்கள் பலரை உறுப்பினர்களாக சேர்த்தால், அதன்மூலம் உங்களுக்கு கமிஷன் வரும் என்றதால், மதுரையில் எனது தலைமையில் பிட்காயின் கிளை நிறுவனத்தை நாகமலை புதுக்கோட்டையில் நடத்தினேன்.

அதில், 484 பேரிடம் கடந்த 2 ஆண்டுகளில் முதலீடாக ரூ.2 கோடியே 75 லட்சத்து 18 ஆயிரத்து 905 பெற்று, அந்த நிறுவனத்தில் மொத்தமாக முதலீடு செய்தோம். இதில் சிலருக்கு மாதப்பணம் கிடைத்தது. அதனை அவர்கள் மறு முதலீடும் செய்தனர். இதன்மூலம் ரூ.7 கோடி அளவுக்கு உறுப்பினர்களுக்கு வட்டியும், அசலும் சேர்த்து தர வேண்டும். கடந்த ஏப்ரல்  முதல் இருதயராஜ் முதலீடு பணத்தை வழங்காததால், என்னிடம் பணத்தை செலுத்தியவர்கள் பணத்தை திரும்ப வழங்கும்படி கேட்டனர். ஆனால் இருதயராஜ் அவரது மனைவி தவரஞ்சனி, மகள்கள் சாய்தணி, சாய் ஜனனி ஆகியோர் பணத்தை கொடுக்காமல் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே, நாங்கள் முதலீடு செய்த அசல் தொகையான ரூ.2 கோடியே 75 லட்சத்து 18 ஆயிரத்து 905 ரூபாயை பெற்றுத் தரவேண்டும். பிட்காயின் மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த கலெக்டர் பரிந்துரை செய்தார்.

Related Stories: