அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வக்கீல்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை: நீதிமன்றம் செல்ல திட்டம்

சென்னை: தனது அனுமதி இல்லாமல் நடத்தப்பட்டுள்ள கட்சி கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்ட பிரச்னைகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கறிஞர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, நீதிமன்றம் சென்று பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கடந்த 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமை கோரிக்கையை வலியுறுத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், ஓபிஎஸ் நீதிமன்றம் சென்று கடைசி நேரத்தில் அதற்கு தடை வாங்கி விட்டார். பொதுக்குழுவில் பங்கேற்ற ஓபிஎஸ்சும் எடப்பாடி ஆதரவாளர்களால் அவமானப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டது என்று சி.வி.சண்முகம் கூறி ஓபிஎஸ் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். பின்னர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த முடிவும் ஓ.பன்னீர்செல்வம் அனுமதி இல்லாமலே நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுத்ததாக கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தென்மாவட்ட சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் அதை பாதியில் ரத்து செய்துவிட்டு நேற்று மாலை சென்னை திரும்பினார். சென்னை, திரும்பியதும் அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் வழக்கறிஞரும் எம்எல்ஏவுமான மனோஜ் பாண்டியன், அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் சி.திருமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, ”எடப்பாடி தரப்பினர் ஓபிஎஸ்சிடம் இருந்த ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாக தன்னிச்சையாக அறிவித்தது, நேற்று நடந்த அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்க முடிவு செய்திருப்பது, பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்ய திட்டமிட்டிருப்பது, வருகிற 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை தன்னிச்சையாக கூட்ட முடிவு செய்திருப்பது சட்டப்படி செல்லாது. அதனால் நீதிமன்றம் சென்று அதற்கு தடை பெறுவது” என்பது உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் - எடப்பாடி மோதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருவதால் இந்த விவகாரம் நீதிமன்றம் சென்று, கட்சியின் இரட்டை இலை சின்னம், கொடியை தேர்தல் ஆணையம் முடக்கி வைக்கும் சூழ்நிலை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அதிமுக தொண்டர்கள் கருதுகிறார்கள்.

Related Stories: