ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கவுகாத்தியில் தங்கியுள்ள சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கவுகாத்தியில் முகாமிட்டுள்ள மகாராஷ்டிரா சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களில் 16 பேர் மீது, கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக துணை சபாநாயகர் பிறப்பித்த நோட்டீஸ் மீது, அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 20ம் தேதி சட்ட மேலவை தேர்தல் முடிந்த அன்றே, அப்போதைய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், ஒரு பகுதி சிவசேனா எம்எல்ஏக்கள் மாயமாகினர். முதலில் சூரத் சென்ற இவர்கள், பின்னர் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினர்.

இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. தன்னிடம், 42 சிவசேனா எம்எல்ஏக்கள் உட்பட 50 பேர் உள்ளதாக ஷிண்டே தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா கட்சியின் அவசர கூட்டம் கூட்டப்பட்டது. கட்சிக் கொறடா சுனில் பிரபு உத்தரவை ஏற்று பங்கேற்காத 16 எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, சிவசேனா கோரிக்கையின் அடிப்படையில் துணை சபாநாயகர் நகர்கரி ஜிர்வால் நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து ஷிண்டே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் பர்தீவாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.கே.கவுல், \”மகாராஷ்டிரா அரசுக்கு எங்களது தரப்பில் வழங்கி வந்த ஆதரவை விலக்கி கொண்டோம். இதில் 38 எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் மகா விகாஸ் கூட்டணி தங்களது ஆட்சி அதிகாரத்தின் பெரும்பான்மையை இழந்து விட்டது. இதுகுறித்த பிரமாணப் பத்திரமும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நம்பிக்கையில்லா தீர்மானம் தற்போது வரையில் நிலுவையில் இருக்கும் போது சபாநாயகர் இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவருக்கு கிடையாது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக சபாநாயகர் இந்த விவகாரத்தில் செயல்பட்டுள்ளார். மேலும் எங்களது தரப்புக்கு பதிலளிக்க இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. குறைந்தது 14 நாட்களாவது வழங்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்யகாந்த், ”அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு செல்லாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது ஏன்?. உங்களுக்கான கோரிக்கையை ஏன் நேரடியாக சபாநாயகரிடம் தெரிவிக்கக் கூடாது’’ என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த என்.கே.கவுல், ‘‘மும்பை உயர் நீதிமன்றத்திற்கு செல்ல எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. ஏனெனில் எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது. மேலும் எங்களது கோரிக்கையை ஏற்க துணை சபாநாயகர் தயாராக இல்லை’’ என தெரிவித்தார்.

இதையடுத்து சிவசேனா உத்தவ் தாக்ரே தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, துணை சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் ஆகியோர், ‘‘இந்த விவகாரத்தில் சபாநாயகர் எடுத்த நடவடிக்கையில் எந்தவித சட்ட விதி மீறல்களும் இல்லை. அவரது அதிகாரத்தில் குறுக்கு தலையீடு இருக்கக் கூடாது. அதற்கான அதிகாரம் இல்லை’’ என தெரிவித்து, வாதங்களை முன் வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர், மகாராஷ்டிரா அரசு, சிவசேனாவின் சுனில் பிரபு, அஜய் சவுதாரி ஆகியோர் அடுத்த 3 நாட்களில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பதில் மனுவுக்கு மற்ற எம்.எல்.ஏக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் 5 நாட்களில் பதில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை 16 எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 39 பேருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கும் மகராஷ்டிரா அரசு மற்றும் மாநில காவல்துறை தரப்பில் போதிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்’’ என்று தெரிவித்தனர். இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள ஷிண்டே, ‘‘இது பாலாசாகேப் தாக்கரேயின் இந்துத்துவாவுக்கும், தர்மவீர் ஆனந்த் திகேயின் சிந்தனைகளுக்கும் கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

* கவர்னரை இன்று சந்தித்து உரிமை கோருகிறது பாஜ?

உச்ச நீதிமன்றத்தில் ஷிண்டே தரப்பில் தாக்கல் செய்த மனுவில், ‘சிவசேனாவின் 38 எம்எல்ஏக்கள் மகாராஷ்டிர அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஷிண்டே ஆதரவு சிவசேனா எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சைகளுடன் சேர்த்து பாஜவிடம் 170 எம்எல்ஏக்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, பாஜ தரப்பில் மகாராஷ்டிர கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க இன்று உரிமை கோர திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: