லடாக் அசல் எல்லைக் கோடு பகுதியில் போருக்கு தயார் நிலையில் சீனா

லடாக்: லடாக்கில் அசல் எல்லைக் கோடு பகுதி முழுவதும் சீனா தனது உள்கட்டமைப்பையும், ஆயுத பலத்தையும் பல மடங்கு அதிகரித்து, எந்த நேரத்திலும் போருக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளது. இந்தியா, சீனா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள லடாக்கில் கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறினர். இதை இந்திய வீரர்கள் தடுத்ததால் இரு தரப்பில் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பிலும் அதிக உயிர் பலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து லடாக்கில் இந்திய, சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. எல்லை மோதலை தவிர்க்க இரு தரப்பிலும் தலா 50,000 வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண இதுவரை 15 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 16வது கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் பலனாக சில பகுதிகளில் படைகள் வாபஸ் பெறப்பட்டாலும், அசல் எல்லைக் கோட்டின் பெரும்பாலான இடங்கள் பதற்றம் நிறைந்ததாகவே உள்ளன.

இதற்கிடையே, 2020ம் ஆண்டுக்குப் பிறகு, லடாக் எல்லையை ஒட்டி சீனா தனது எல்லையில் உள்கட்டமைப்பையும், ஆயுத பலத்தையும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக உளவுத்தகவல்கள் வெளியாகி உள்ளன. லடாக் மேற்கு பிராந்தியத்தில் அசல் கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 100 கிமீ தொலைவில் பரந்த அளவில் விரிவுபடுத்தப்பட்ட துருப்புகள் தங்குமிடம், நீண்ட தூர பீரங்கிகள், ராக்கெட் அமைப்புகள், மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள், விரிவாக்கப்பட்ட போர் விமான ஓடுபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக உளவுத்துறை தகவல்கள் கூறுகையில், ‘அசல் எல்லைக் கோட்டின் மேற்கு பிராந்தியத்தில் 2020ம் ஆண்டில் 20 ஆயிரம் படை வீரர்கள் தங்கும் திறன் மட்டுமே இருந்தது. இப்போது 1.20 லட்சம் வீரர்கள் தங்கும் அளவுக்கு முகாம்களை சீனா கட்டமைத்துள்ளது. அங்கு சோலார் ஆற்றல் மின் வசதி, சிறிய நீர் மன் திட்டங்களையும் அமைத்துள்ளனர்.

இது குளிர்காலத்தில் வீரர்கள் எளிதாக சமாளிக்க உதவும். இதுதவிர, முன்பு 4 பிரிவுகள் மட்டுமே சுழற்சி முறையில் கிழக்கு லடாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், தற்போது 11 பிரிவுகள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன’ என கூறப்படுகிறது.

இதுதவிர, அசல் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே ஏராளமான கிராமங்களை அமைத்துள்ள சீனா, ராணுவ தளவாடங்களை எளிதில் கொண்டு வர சுரங்கச் சாலைகளையும் அமைத்துள்ளன. 50 கிமீ வரை குண்டுகளை வீசக்கூடிய பீரங்களையும், தரையில் இருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கு நவீன ரக எச்க்யூ9 ரக ஏவுகணைகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இது ரஷ்யாவின் எஸ்-300 ஏவுகணை அமைப்பை அடிப்படையாகக் கொண்டதாக கருதப்படுகிறது. அதாவது 100 முதல் 300 கிமீ வரை ஏவுகணையை ஏவும் திறன் கொண்டது. மேலும் பழைய பீரங்கிகளுக்கு பதிலாக, பல நவீன தலைமுறை டாங்கிகளையும் சீனா புதுப்பித்து நிறுத்தி உள்ளது. 100 கிமீக்கு அதிகமாக ராக்கெட் குண்டுகளை வீசக்கூடிய ரஷ்ய எம்ஆர்எல்எஸ் ராக்கெட் ஏவும் அமைப்பையும் நிறுத்தி உள்ளது.

இதைத்தவிர, ஆளில்லா விமானம் மூலமாக கண்காணிப்பு பகுதியையும் சீனா விரிவுபடுத்தி உள்ளது. இதன்படி பார்த்தால், கிழக்கு லடாக்கில் எந்த நேரத்தில் போர் நடந்தாலும் அதை எதிர்கொள்ள சீனா தற்போது தயார் நிலையில் உள்ளதாக தெரிவதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

Related Stories: