1,000 பேர் இருந்த மாலில் ஏவுகணை தாக்குதல்: உக்ரைனில் பீதி

கீவ்: உக்ரைனில் கிரமென்சுக் நகரில் 1000 பேர் இருந்த ஷாப்பிங் மாலில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 4 மாதங்களை கடந்துள்ளது. உக்ரைனின் மரியுபோல், கெர்சன் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்ய படையினர் கைப்பற்றி உள்ளனர். தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ள கிரமென்சுக் தொழில்துறை நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த மாலில் ரஷ்யா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இது குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி கூறும் போது, ``தாக்குதல் நடந்த போது மாலில் ஏறக்குறைய 1,000 பேர் இருந்திருப்பார்கள். இதில் எத்தனை பேர் ஏவுகணை தாக்குதலில் பலியாகி இருப்பார்கள் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்வதை பார்க்க அவர்களுக்கு பிடிக்கவில்லை. அந்த கோபத்தில்தான், ரஷ்யா இது போன்று நாசவேலைகளில் ஈடுபடுகிறது,’’ என்று கூறினார்.

அதிபரின் அலுவலகத்தின் துணை தலைவர் கைரில் திமோஷென்கோ, ``இந்த தாக்குதலில் 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 20 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 9 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது,’’ என டெலிகிராம் பதிவில் தெரிவித்தார். ஜி7 உச்சி மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஜெலன்ஸ்கி பேசிய நிலையில், ரஷ்யா உடனடியாக இந்த தாக்குதலை அரங்கேற்றி உள்ளது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Related Stories: