ஒரே வாரத்தில் வெள்ளி விலை ரூ.2 ஆயிரம் சரிந்தது

சேலம்: சேலத்தில் செவ்வாய்பேட்டை, திருவாக்கவுண்டனூர், கந்தம்பட்டி, சிவதாபுரம், திருமலைகிரி, பள்ளப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு வெள்ளி கால்கொலுசு, அரைஞாண்கொடி, குங்குமசிமிழ், சில்வர் தட்டு, குடம் உள்பட பல்வேறு வகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கால்கொலுசு தமிழகத்தில் பல இடங்களுக்கும்,  வட மாநிலங்களுக்கும் அதிகளவில் அனுப்பப்படுகிறது. இதனால் ஆண்டு முழுவதும் சேலத்தில் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி இருக்கும். சமீப காலமாக தங்கத்தை போலவே வெள்ளியின் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் இருந்து தொடர்ந்து முகூர்த்தங்கள் இருந்தது. இதன் காரணமாக வழக்கத்தைவிட வெள்ளியின் விற்பனை அதிகரித்தது. கடந்த ஒரு வாரமாக தேய்பிறை முகூர்த்தம் என்பதால் வெள்ளிப்பொருட்களின் விலை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

சேலம் செவ்வாய்பேட்டை வெள்ளி வியாபாரிகள் கூறியதாவது: சேலம் வெள்ளிப்பொருட்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது. வழக்கமாக தீபாவளி உள்பட வட மாநிலங்களில் கொண்டாடப்படும் முக்கிய விஷேச தினங்களில் வெள்ளிப்பொருட்கள் விற்பனை அதிகரிக்கும். தமிழகத்தில் பொங்கல் மற்றும் ஊர் திருவிழாக்களின் போது விற்பனை அதிகமாக இருக்கும். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக பத்துக்கும் மேற்பட்ட முகூர்த்தங்கள் வந்தது. தொடர் முகூர்த்தம் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வெள்ளிப்பொருட்களின் விற்பனை களைகட்டியது.

கடந்த ஒரு வாரமாக முகூர்த்தங்கள் இருந்தாலும், தேய்பிறை முகூர்த்தம் காரணமாக திருமணங்கள் நடக்கவில்லை. இதன் காரணமாக வெள்ளிப்பொருட்களின் விற்பனை சரிந்துள்ளது. இம் மாதம் இரண்டாவது வாரத்தில் ஒரு கிலோ வெள்ளி ₹63 ஆயிரத்து 500க்கு விற்றது. ஒரு வாரத்தில் கிலோவுக்கு ₹2 ஆயிரம் சரிந்து, ₹61 ஆயிரத்து 500க்கு விற்கப்படுகிறது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Related Stories: