×

சாதாரண கட்டண பஸ்களின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சாதாரண கட்டண பஸ்களின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தின் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, தமிழகம் முழுவதும் உள்ளூர் பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் செய்யும் வசதி அளிக்கப்படும் என்று தி.மு.க. சார்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள சாதாரண கட்டண நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், தமிழகம் முழுவதும் தினம் தோறும் லட்சக்கணக்கான பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், சாதாரண கட்டண நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிப்பதால், அந்த பஸ்களை இயக்கும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கான வசூல்படி வெகுவாக குறைந்தது. இதைத் தொடர்ந்து அந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படியை உயர்த்தி வழக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், சாதாரண கட்டண நகர பஸ்களின் ஓட்டுனர், நடத்துனர்களின் வசூல்படி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின், 4-வது கட்ட பேச்சுவார்த்தை கடந்த மே 12-ந் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் கே.கோபால் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் பஸ்களின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு பேட்டாவை நிர்ணயம் செய்திட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

அதன்படி, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சாதாரண பயண கட்டண பஸ்களில் பெண்கள் இலவச பஸ் பயணம் செய்ய அனுமதித்ததை தொடர்ந்து ஓட்டுனர், நடத்துனர்கள் பெற்று வந்த வசூல்படி குறைவினை ஈடுகட்டும் வகையில் அதனை உயர்த்தி முறைப்படுத்தி வழங்கும் வகையில் சாதாரண கட்டண பஸ்களின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Government , Doubling of collection for drivers and operators of ordinary fare buses: Government of Tamil Nadu Notice
× RELATED வாகனங்களில் பெண்கள் பாதுகாப்பு...