திருத்தணி முருகன் கோயிலில் பாத்ரூம் இருக்கு...கதவு இல்லை; பக்தர்கள் கடும் வேதனை

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகைவந்து சாமி தரிசனம் செய்துவிட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இவ்வாறு வருகின்ற பக்தர்கள் வசதிக்காக கடந்த 10 வருடங்களுக்கு முன் மலைக்கோயிலுக்கு பின்புறம் கழிப்பிட வசதி, குளியல் அறை வசதிகள் செய்யப்பட்டது. இது பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. குறிப்பாக பெண்கள், பாத்ரூம் செல்வதற்கும் உடைகள் மாற்றுவதற்கும் மிகவும் பாதுகாப்பாக இருந்தது.

இந்த நிலையில், தற்போது குளியல் அறை, கழிப்பிட அறையின் கதவுகள் உடைந்துவிட்டது. இதனால் திறந்தவெளியாக கிடப்பதால் அங்கு செல்வதற்கு கூச்சப்படுகின்றனர். பெண்களும் வயதானவர்களும் பாத்ரூம் வசதியில்லாததால் மிகவும் திண்டாடுகின்றனர்.

இதுபற்றி கோயில் நிர்வாகத்திடம் பக்தர்கள் பலமுறையிட்டும் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. எனவே, பாத்ரூம், கழிப்பறைக்கு உடனடியாக கதவு அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.இதுபற்றி பக்தர்கள் கூறுகையில், ‘மலைக்கோயில் வளாகத்தில் பாத்ரூம், கழிப்பறை கதவுகள் உடைந்துள்ளதால் உள்ளே செல்வதற்கு கூச்சமாக உள்ளது. எனவே, இந்த விஷயத்தில் கோயில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: