×

ஜெயங்கொண்டம் அருகே மாளிகைமேட்டில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி; தொல்லியல் துறை ஆணையர் ஆய்வு

ஜெயங்கொண்டம்: தமிழகத்தில் 2020-21ம் ஆண்டிற்கான தொல்லியல் துறை மூலம் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்று கங்கைகொண்டசோழபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது. இதில் மாளிகைமேட்டில் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியபோது பழங்கால கூரை ஓடுகள், பானை ஓடுகள், சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தினாலான ஓடுகள், இரும்பினாலான ஆணிகள், சீன கலைநயமிக்க மணிகள் போன்ற பொருட்கள், பானை விளிம்புகள், சிறிய அளவிலான அரிய பொருட்கள், கட்டிடங்கள் இருந்ததற்கான எச்சங்கள் கிடைத்தன.

அவை தொல்லியல் துறையினரால் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்றுச்சுவரும், பின்னர் அரண்மனையின் தொடர்ச்சியாக 2-வது பாகமும் கண்டறியப்பட்டது. வடிகால் அமைப்பு போன்ற சுவர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 8 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த பணியில் நாளொன்றுக்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

முதற்கட்ட பணியில் 30-க்கு 20 என்ற சதுர மீட்டர் அளவில் இந்த அகழ்வாராய்ச்சி பணி தொடங்கி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முதற்கட்ட அகழாய்வு பணி நிறைவடைந்தது. தொடர்ந்து இப்பகுதியில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியதையடுத்து 2-ம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி காணொலி காட்சி மூலம் தமிழக அரசு தொடங்கி வைத்தது.

2-ம் கட்ட அகழாய்வின்போது சோழர் காலத்து கட்டிடங்கள், பழங்கால அரண்மனை சுற்றுச்சுவர்களின் தொடர்ச்சி கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழங்கால பானை மற்றும் ஐம்பொன் கலந்த செப்பு காப்பு ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் தமிழக தொல்லியல் துறையின் ஆணையர் (பொ) சிவானந்தம் தலைமையிலான தொல்லியல் துறை அதிகாரிகள் மாளிகைமேட்டில் நடைபெற்றுவரும் 2-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை ஆய்வு செய்தபோது, அகழாய்வு பணிகள் நடைபெறும் இடத்தில் நீளம் மற்றும் உயரத்தின் அளவுகளை சரி பார்த்து அன்றாடம் நடைபெறும் பணிகளை உடனுக்குடன் மதிப்பீடு பட்டியல் தயார் செய்து குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் மழை காலங்களில் கவனமாக இருக்க வேண்டும் என தொல்லியல் துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.  இந்த ஆய்வில் தொல்லியல் வல்லுநர் பேராசிரியர் ராஜன், இணை இயக்குனர் பாக்கியலட்சுமி பொறுப்பாளர் சுபலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Maligaimet ,Jayankondam ,Commissioner ,Department ,of Archeology , Phase 2 excavation at Maligaimet near Jayankondam; Study by the Commissioner of the Department of Archeology
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...