கிருஷ்ணகிரி அருகே இன்று காலை குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்; ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே குடிநீர் கேட்டு இன்று காலை கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி அடுத்த வெங்கடாபுரம் ஊராட்சி சிவானந்தபுரத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஒரே ஒரு பொதுக்குடிநீர் குழாய் தான் உள்ளது. சாலை, கழிவுநீர் கால்வாய், தெரு விளக்கு வசதிகள் எதுவும் இல்லை.

அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டர் அலுவலகம் மற்றும் பஞ்சாயத்து அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொது குழாய் எப்போது தண்ணீர் வரும் என தெரியாத நிலையில், காத்திருந்து குடிநீர் பிடிப்பதே பெரும்வேலையாக இருப்பதால் மாணவ, மாணவிகள் சரியான நேரத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லமுடியவில்லை.

மேலும் கூலி வேலைக்கு சரிவர செல்லமுடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரத்தில் இருந்த கிராமமக்கள் இன்று காலை 7 மணிஅளவில் சிவானந்தபுரத்தில் கிருஷ்ணகிரி-மகாராஜகடை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும்  தனியார் பள்ளி வாகனங்கள், டவுன் பஸ், கார்கள் என 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்த மகாராஜகடை இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் மற்றும் போலீசார், பஞ்சாயத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் பின்னர் சீரானது.

Related Stories: