மடிப்பாக்கம் பாதாள சாக்கடை விவகாரம்; கால நிர்ணயம் செய்ய உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.! உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

புதுடெல்லி: மடிப்பாக்கம் பாதாள சாக்கடை திட்டம் என்பது அரசின் கொள்கை சார்ந்தது  என்பதால் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கால நிர்ணயம் செய்ய அதிகாரம்  இல்லை என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த  2011ம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மடிப்பாக்கம் பகுதியில்  பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தவில்லை என அய்யம்பெருமாள் என்பவர் கடந்த  2019ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.  அதில், ”அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ள செப்டிக் டேங்குகள் நிரம்பி  சாலைகளில் வடிவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே பாதாள சாக்கடை  அமைப்பது தொடர்பாக அனுப்பிய மனு மீது சென்னை பெருநகர குடிநீர் வழங்கல்  மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிர்வாக இயக்குனர் நடவடிக்கை எடுக்க  குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்து உத்தரவிட வேண்டும் என கோரிக்கை  வைக்கப்பட்டது. இதையடுத்து நடந்த விசாரணையின் போது, மடிப்பாக்கம்  பகுதிக்கு ரூ.160 கோடி திட்ட மதிப்பில் பாதாள சாக்கடை அமைப்பது தொடர்பாக  திட்ட அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம்  வழங்கப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை கிடைத்தவுடன், நிதி ஒதுக்கப்பட்டு  டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவங்கும். மேலும் டெண்டர் பணிகளை முடிக்க 6 மாத  காலமும், அதன்பின்னர் 36 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும் எனவும் சென்னை  குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் தரப்பில் அப்போது  தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்பதாக தெரிவித்த நீதிமன்றம், பாதாள  சாக்கடை அமைக்கும் பணிகளை 2020ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என  2019ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி  பணிகள் முடிக்கப்படவில்லை என அய்யம்பெருமாள் உயர்நீதிமன்றத்தில் மீண்டும்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அதனை  பரிசீலனை செய்து அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பை  உறுதி செய்ததோடு, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர்,  சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிர்வாக இயக்குனர்,  செயற்பொறியாளர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான  வழக்கறிஞர் குமணன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ”மடிப்பாக்கம் பாதாள சாக்கடை திட்டம் என்பது அரசின்  கொள்கை சார்ந்த முடிவாகும். இதில் நீதிமன்றங்கள் தலையிட்டு கால நிர்ணயம்  செய்ய அதிகாரம் இல்லை என்பதால் பதிவு செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு  வழக்கை ரத்து செய்ய வேண்டும். மேலும் இதுபோன்று செய்வது என்பது  உயர்நீதிமன்றத்தின் அரசியல் சாசன அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: