மகன் தந்தைக்காற்றும் செயல்; பனை மரம் ஏறி வருவாய் ஈட்டி பாடம் கற்கும் கல்லூரி மாணவன்

தூத்துக்குடி: ஏரல் அருகே பண்டாரவிளையில் பனைமரம் ஏறி பதநீர் எடுத்து சம்பாதித்து கல்லூரியில் படித்து வருகிறார் ஒரு மாணவன். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பண்டாரவிளை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (51). விவசாயியான இவருக்கு அன்னலெட்சுமி (45) என்ற மனைவியும், 3 மகன், 2 மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் விக்னேஷ்நாதன் (25) டிப்ளமோ படித்து விட்டு நட்டாத்தியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். 2வது மகன் நந்தகுருநாதன்(23) தூத்துக்குடி பாலிடெக்னிக்கில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

மூன்றாவது மகன் மாரிசெல்வன் (19) சாயர்புரம் போப் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ படித்து வருகிறார். 4வது மகள் பவதாரணி (15) பண்ணைவிளை தக்கர் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பும், 5வது மகள் சுஜேதரிசனி (13) பண்டாரவிளை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா ஊரடங்கு காரணமாக குடும்ப செலவுக்கு பழனிச்சாமி சிரமப்பட்டார். அப்போது வீட்டில் இருந்து வந்த மாணவன் மாரிசெல்வன் நமக்கு ஏராளமான பனை மரங்கள் இருந்தும் அதன் மூலம் வருமானம் இல்லாமல் உள்ளதே என கவலைப்பட்டதோடு மட்டும் மல்லாமல் நண்பர்கள் உதவியுடன் பனைமரம் ஏறிபார்த்தார். முதலில் சிரமப்பட்ட மாரிசெல்வன் படிப்படியாக பனைமரம் ஏற கற்றுக் கொண்டார்.

இதையடுத்து அவர் பனைமரம் ஏறத்தெரிந்த பெரியவர்களிடம் சென்று பதநீர் இறக்குவது எப்படி? என்ற விவரத்தை கேட்டு தெரிந்து கொண்டார். இதையடுத்து தினசரி காலை 4 மணிக்கு எழுந்து ஊர் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று பனைமரம் ஏறி அதில் இருந்து பதநீர் இறக்கி வருகிறார். இந்த பதனீரை பிளாஸ்டிக் குடத்தில் ஊற்றி வீட்டுக்கு கொண்டு செல்கிறார். அதன்பின் குளித்துவிட்டு கல்லூரிக்கு புறப்பட்டு சென்றுவிட்டு படிக்கிறார். அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு நேரில் வந்து பதநீரை வாங்குகின்றனர்.

கல்லூரி முடிந்து மாலை வீட்டுக்கு வரும் மாரிசெல்வன் மீண்டும் பனைமரத்தில் ஏறி பாலையை சீவிவிடுகிறார். இப்படி தினசரி காலை பனைமரம் ஏறி பதநீர் எடுத்து வீட்டில் கொடுத்துவிட்டு கல்லூரிக்கு சென்று படித்துவிட்டு திரும்பி மாலை மீண்டும் பனைமரம் ஏறுவது என வழக்கமாக கொண்டுள்ளார். இதுகுறித்து மாரிசெல்வன் கூறுகையில், ‘குடும்பத்திற்கு போதிய வருமானம் கிடைக்காததினால் நானும் படித்து கொண்டிருக்கும் போதே சம்பாதித்தால் எனது படிப்பு செலவுக்கு மட்டுமல்லாமல் குடும்பத்திற்கு சிறிய உதவியாக இருக்குமே என நினைத்ததாதல் தான் பனைமரம் ஏறத்தொடங்கினேன். தினசரி 18 பனைமரம் ஏறி வருகிறேன்.  பெரும்பாலும் எங்களது வீட்டை தேடி வந்து பதநீர் வாங்கி செல்வார்கள். ஒருவேளை இந்த பதநீர் விற்காமல் போனால் அதை காய்ச்சி நாங்கள் கருப்பட்டி தயாரித்து விற்பனை செய்வோம்’ என்றார்.

Related Stories: