அக்னிபாதை திட்டத்தில் 3 நாட்களில் 56,960 பேர் விண்ணப்பம்; இந்திய விமானப்படை தகவல்.! ஜூலை 5ம் தேதி கடைசி நாள்

புதுடெல்லி: முப்படையில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாதை திட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு நீடிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவோருக்கான தகுதிகள், விதிகள், நிபந்தனைகள் உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்பு ராணுவத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, பொதுப்பணி, தொழில்நுட்பம் (விமான போக்குவரத்து, வெடிபொருள் பரிசோதகர்) கிளார்க், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் போன்ற பிரிவினருக்கான முன்பதிவு ஜூலையில் தொடங்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோல விமானப்படையில் சேருவதற்கான ஆட்சேர்க்கை அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி வீரர்கள் சேர்க்கை கடந்த 24ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 3,800 வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களில் மொத்தம் 56,960 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த தகவல் இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 5ம் தேதி கடைசி நாளாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https:careerindianairforce.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் தேர்வு வரும் ஜூலை 24ம் தேதி நடத்தப்படும் என்றும் இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.

Related Stories: