×

ஜூலை 11 மகாராஷ்டிரா அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: ஜூலை 11 மகாராஷ்டிரா அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர்  ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்கொடி உயர்த்தியுள்ளனர். தன்னுடன் சிவசேனா எம்எல்ஏ.க்கள் 42 பேர் உட்பட 50 எம்எல்ஏ.க்கள் இருப்பதாக ஷிண்டே கூறி வருகிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அவர்கள் அசாம் மாநிலம், கவுகாத்தி ஓட்டலில்  முகாமிட்டு உள்ளனர்.

இதனால், மகா விகாஸ் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடனான மகா விகாஸ் கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜவுடன் சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே, அதிருப்தி எம்எல்ஏக்களின் நிபந்தனையாக உள்ளது. ஷிண்டேவின் ஆதரவு எம்எல்ஏ.க்கள் 16 பேரின் பதவியை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பறிப்பது தொடர்பாக துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஷிண்டே தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்; எதற்காக நீங்கள் நேரடியாக உச்சநீதிமன்றத்து வந்தீர்கள்? மும்பை உயர்நீதிமன்றத்துக்கு சென்றிருக்கலாமே? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அதிருப்தி எம்எல்ஏக்கள்; தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. மும்பை செல்வது இயலாத காரியம் என விளக்கம் அளித்தனர். இதனை தொடர்ந்து நீதிபதிகள் வழக்கு விசாரணைக்கு ஒப்புக்கொண்டனர். இதனை தொடந்து வழக்கு தொடர்பான வாதங்கள் நடந்த நிலையில் வரும் 11ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த இடைப்பட்ட காலத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந் இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா அரசு பதிலளிக்கவும், அதன் பிறகு 5 நாட்களில் அதிருப்தி எம்எல்ஏக்கள் பதில் பிரமாணம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். இந்த இடைப்பட்ட காலத்தில் தகுதி நீக்கம் செய்யக்கூடாது எனவும், அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவும் மகாராஷ்டிரா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Maharashtra ,Supreme Court , July 11 Maharashtra disgruntled MLAs should not be disqualified: Supreme Court orders action
× RELATED மகாராஷ்டிராவில் கிராமத்தில் பள்ளி...