×

மகாராஷ்டிராவில் முற்றும் மோதல்; ‘மத்திய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருங்கள்’.! ஒன்றிய உள்துறை செயலாளருக்கு கவர்னர் கோஷ்யாரி கடிதம்

மும்பை: மத்திய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருங்கள் என்று ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவுக்கு, மகாராஷ்டிரா மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கடிதம் எழுதியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் 40 பேர், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரண்டுள்ளனர். மேலும் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இடம் பெற்றிருந்த சுயேச்சை எம்எல்ஏக்கள் சிலரும், ஏக்நாத் ஷிண்டேவுடன் உள்ளனர். அதிருப்தி எம்எல்ஏக்களுடன் தற்போது ஏக்நாத் ஷிண்டே, அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள உயர் கல்வி அமைச்சர் உதய் சமந்த்தும், கவுஹாத்தி சென்று, ஷிண்டேவுடன் இணைந்து விட்டார். இதையடுத்து மாநில அமைச்சர்களில் 3 பேர் மட்டுமே, தற்போது உத்தவ் தாக்கரேவுடன் உள்ளனர். சிவசேனா கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களில் 3ல் 2 பங்கு எம்எல்ஏக்கள் தற்போது ஷிண்டேவுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், ‘உங்கள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது’ என 16 எம்எல்ஏக்களுக்கு மட்டும், துணை சபாநாயகர் நரஹரி ஷிர்வால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 16 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டால், 3ல் 2 பங்கு பெரும்பான்மை என்ற வலிமையை ஷிண்டே இழந்து விடுவார் என்பதால், துணை சபாநாயகர், அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக ஏக்நாத் ஷிண்டே, நேற்று துணை சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘3ல் 2 பங்கு எம்எல்ஏக்கள் தங்கள் வசம் உள்ளதால், சிவசேனா கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தன்னை அங்கீகரிக்க வேண்டும்’ என்று கோரியுள்ளார். இதனால் ஆட்சி மட்டுமல்ல, கட்சியும் உத்தவ் தாக்கரேவின் கையை விட்டு போய் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சிவசேனா கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அதிருப்தி எம்எல்ஏக்களின் குடும்பத்தினருக்கு, ஒன்றிய அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது. சிவசேனா கட்சியின் எம்பி சஞ்சய் ராவத் பேசுகையில், ‘கவுகாத்தியில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் உயிருள்ள சடலங்கள்.

அவர்களது ஆன்மா இறந்து விட்டது. அவர்களது உடல்கள்தான் மும்பை வரும்’ என்று கூறியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ஷிண்டே தனது டுவிட்டர் பதிவில், ‘மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதற்கு காரணமான தாவூத் இப்ராகிமுடன் தொடர்பில் உள்ள கட்சிகளுடன் தற்போது சிவசேனா கூட்டணி வைத்துள்ளது. அந்த கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேற வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு’ என்று கூறியுள்ளார். ‘வன்முறைகளை தூண்டும் வகையில் சஞ்சய் ராவத் பேசியுள்ளார். அவர் தனது நாவை கட்டுப்படுத்த வேண்டும்’ என்று அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவரான தீபக் கேசர்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘துணிவிருந்தால் 40 எம்எல்ஏக்களும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, தேர்தலில் நிற்க வேண்டும்.

அசாமில் வெள்ளம் காரணமாக மக்கள் உணவின்றி தவித்து கொண்டிருக்கும் வேளையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் சொகுசு ஓட்டலில், உல்லாசமாக உள்ளனர். இது மகாராஷ்டிர மாநிலத்தின் மாண்பை சீர் குலைக்கும் செயல்’ என்று உத்தவ் தாக்கரேவின் மகனும், மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார். இதனிடையே கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து, நேற்று காலை மருத்துவமனையில் இருந்து மகாராஷ்டிரா கவர்னர் கோஷ்யாரி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நேற்று மாலை அவர், ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மத்திய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருங்கள்’ என்று கேட்டு கொண்டுள்ளார். மேலும் அதிருப்தி எம்எல்ஏக்களின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் மாநில டிஜிபிக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Maharashtra ,Security ,Governor ,Koshyari ,Union Home Secretary , Complete conflict in Maharashtra; ‘Keep the Central Security Forces ready’.! Governor Koshyari's letter to the Union Home Secretary
× RELATED திருமணம் செய்து கொள்ள...