அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்!: தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

ராமநாதபுரம்: அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இந்திய காங்கிரஸ் கட்சி இன்று  போராட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டிலும் பல்வேறு மாவட்டங்களில் இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெறுகிறது. ராமநாதபுரம் அரண்மனையில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் ரமேஷ் பாபு தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஒன்றிய அரசு அறிவித்த அக்னிபாதை திட்டத்தை உடனடியாக திரும்பப்பெறுமாறு கண்டன முழக்கங்களை எழுப்பினர். விராலிமலையில் வடை, பக்கோடா சுடுவது போல நடித்துக்காட்டி காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அக்னிபாதை திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்வோர் 4 ஆண்டுகளுக்கு பிறகு தெருக்கடை அமைத்து பிழைத்த கொள்வதா? என ஒன்றிய அரசுக்கு நூதனமாக கேள்வி எழுப்பினர். மேலும் விசாரணை என்ற பெயரில் ராகுல்காந்தியை அமலாக்கத்துறை துன்புறுத்தி வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கார்த்தி சிதம்பரம் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், அக்னிபாதை என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்.க்கு தனிப்படையை ஒன்றிய அரசு ஏற்படுத்த திட்டமிடுவதாக தெரிவித்தார். ராணுவ வீரர்கள் தேசிய கொடி பக்கமும், அக்னிபாதை வீரர்கள் காவிக்கொடி பக்கமும் இருப்பார்களா? என தனக்கு சந்தேகம் எழுவதாக அவர் விமர்சித்தார். நாகர்கோவிலில் அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்துக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதேபோல ஈரோடு மாவட்டம் மூலபாளையம் மற்றும் அந்தியூரில் அக்னிபாதை திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

Related Stories: