×

இல்லத்தரசிகளுக்கு விரைவில் 1000 ரூபாய் வழங்கப்படும்; ஆர்.எஸ்.பாரதி பேச்சு

பெரம்பூர்: இல்லத் தரசிகளுக்கு விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் துவங்கப்படும் என்று ஆர்.எஸ்.பாரதி பேசினார். கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘’வேருக்கு விழா’’ என்ற தலைப்பில் இல்லற இணையரங்கம் நிகழ்ச்சி ஓட்டேரியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் உதயசங்கர் தலைமை வகித்தார். இதில் 9 ஜோடிகளுக்கு  தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நடத்தி வைத்தனர்.  இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில், ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது; இது ஒரு மகிழ்ச்சியான விழா. 9 பேருக்கு திருமண நிகழ்ச்சி, வசதியற்றவர்களுக்கு உரிய முறையில் திருமணம் நடந்திருக்கிறது. 9 பேருக்கு தாலி எடுத்து கொடுத்தேன். சுயமரியாதை மற்றும் வைதீக திருமணம் இரண்டும் கலந்து இங்கு நடந்துள்ளது. கலைஞர் தலைமையில் திருமணம் செய்துகொண்டவன் நான். என் பிள்ளைகளும் கலைஞர் தலைமையில் திருமணம் செய்து கொண்டவர்கள். சுயமரியாதை திருமணம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த திருமணங்கள் எடுத்துரைக்கிறது. பெண்களின் திருமண வயதை உயர்த்தியவர் பெரியார்.  இப்போது, ஒவ்வொரு பெண்ணும் படிக்க மாதம் 1000 ரூபாய் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பெண்கள் படிப்பு முடித்து யாரையும் எதிர்பார்க்காமல் இருக்க இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதிமுக ஆட்சியில் ரேஷன் கார்டு முறையில் பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் பணி நடைபெறுகிறது. பணிகள் முடிந்து கணக்கெடுப்பு முழுமையாக முடிந்த பின் அண்ணா அல்லது கலைஞர் பிறந்தநாளில் இல்லத்தரசிகளுக்கு  மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் ஐசிஎப் ஆர் கோகுல்நாத், மாநில வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் நிலவழகன், பார்த்திபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Housewives will soon be given 1000 rupees; Speech by RS Bharathi
× RELATED 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு...