பொதுத்துறை நிறுவனங்களை விற்பது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்; முத்தரசன் எச்சரிக்கை

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: அக்னி பாதை திட்டத்தை கண்டித்து இளைஞர்கள் கொந்தளித்து போராடி வருகின்றனர். இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நெல்லுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ஆதார விலை போதுமானதாக இல்லை. பாஜக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததின்படி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியினுடைய பரிந்துரை அடிப்படையில் விலையினை தீர்மானிக்க வேண்டும்.

உற்பத்தி செலவினங்களை கணக்கிட்டு, அதனை காட்டிலும் 50 சதவீதம் உயர்த்தி விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பாஜக அரசுக்கு பொதுத்துறையின் மீது நம்பிக்கை கிடையாது. அதனால் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்கிறது. இந்த செயல் நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு ஆபத்து ஏற்படும் போது, அதனை தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் மிக்க குடியரசு தலைவர் தேவை.

கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். இவர் வெற்றி பெறுவதின் மூலம் நாட்டின் இறையாண்மை காக்கப்படும் என நம்புகிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: