ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்-படகு சவாரி செய்து குதூகலம்

ஏற்காடு: ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்து மகிழந்தனர். தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து, நடப்பு கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. கடந்த வாரம் முதல் சனிக்கிழமை விடுமுறையை அனுபவித்த மாணவர்கள், நேற்று முன்தினம் 2வது சனிக்கிழமை விடுமுறையை கொண்டாடினர். தங்களது பெற்றோருடன் சுற்றுலா தலங்களுக்கு சென்று பொழுது போக்கி மகிழ்ந்தனர்.

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில், நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்த நிலையில், நேற்றும் பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். கோடை விழாவையொட்டி, அண்ணா பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்ட பூந்தொட்டிகளில் பெரும்பாலானவை அகற்றப்படாத நிலையில் அப்படியே உள்ளது. அந்த பூந்தொட்டிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் ஏற்காடு ஏரியில் உல்லாச படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மேலும், மான் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள பல வகையான பறவைகள் மற்றும் விலங்கினங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து லேடிஸ் சீட், ஜென்ட்ஸ் சீட்டுக்கு சென்று ஓங்கி உயர்ந்த மலை முகடுகளில் இருந்தவாறு இயற்கை காட்சிகளை ரசித்தனர். தொடர்ந்து ரோஜா தோட்டத்தை குடும்பத்தோடு பார்வையிட்டனர். இதேபோல், மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சேலம் மட்டுமின்றி அண்டைய மாவட்டங்களான தர்மபுரி, நாமக்கல் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து குடும்பம் குடும்பமாக சுற்றுலா வந்திருந்த பயணிகள், காவிரியில் புனித நீராடி அணை முனியப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து அணை பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணிகள், அங்குள்ள ஊஞ்சலில் ஆடியும், சறுக்கு விளையாடியும் பொழுது போக்கி மகிழ்ந்தனர். இடைப்பாடி: காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர், இடைப்பாடி அருகே பூலாம்பட்டியில் பெருக்கெடுத்துச் செல்கிறது. வார விடுமுறை தினத்தையொட்டி, நேற்று பூலாம்பட்டி சுற்றுலா தலத்தில் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்ளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

இயற்கை காட்சிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள், பூலாம்பட்டி படித்துறையில் இருந்து அக்கரையில் உள்ள ஈரோடு மாவட்டம்  நெருஞ்சிப்பேட்டை இடையே இயக்கப்பட்ட விசைப்படகில் குடும்பத்தோடு உல்லாச சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் பூலாம்பட்டி படகுத்துறை களை கட்டியது.

Related Stories: