வாழைத்தோட்டம், பொக்காபுரத்தில் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்கள் மீண்டும் செயல்படுகிறதா?

ஊட்டி :  ஊட்டி அருகே வாழைத்தோட்டம், பொக்காபுரம் பகுதிகளில் யானை வழித்தடத்தில் உள்ளதாக சீல் வைக்கப்பட்ட கட்டிடங்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறதா? என கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள மாயார் பள்ளத்தாக்கு, சீகூர் பள்ளத்தாக்கு, சோலூர், முதுமலை, பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம்  உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் அதிகம் நடமாடும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகள் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியில் வருகிறது. யானை வழித்தடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ரிசார்ட் மற்றும் காட்டேஜ்கள் உள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை குடியிருப்புக்கான அனுமதி பெற்று காட்டேஜ் மற்றும் ரிசார்ட்டுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், சில கட்டிடங்கள் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக ரிசார்ட்டுகள், ஓட்டல்கள், காட்டேஜ்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் யானைகள் இடம்பெயருவதில் சிரமம் ஏற்படுவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் நீலகிரி மாவட்டம், முதுலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டத்தில் உள்ள சீகூர் சமவெளியில் யானைகள் வழித்தடம் தொடர்பாக கடந்த 2010ம் ஆண்டு வரைப்படத்துடன் கூடிய அரசாணை வெளியிடப்பட்டது.

இதனை எதிர்த்து ரெசார்ட்டுகள் மற்றும் காட்டேஜ் உரிமையாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் யானைகள் வழித்தடம் தொடர்பான இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, மசினகுடி, பொக்காபுரம், வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 309 அறைகள் கொண்ட 39 கட்டிடங்கள் யானைகள் வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிக்கை அளித்தது.

மாவட்ட நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 309 அறைகள் கொண்ட 39 கட்டிடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களை சிலர் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. அந்த சமயத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுத்தனர்.

இந்நிலையில் வாழைத்தோட்டம், பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் வழித்தடத்தில் உள்ளதாக சீல் வைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் பயன்பாட்டில் உள்ளனவா? என்பது குறித்து மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கட்டிடங்களை பார்வையிட்ட பின், யானைகள் வழித்தடம் தொடர்பான வரைபடங்களையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது ஊட்டி ஆர்டிஒ., துரைசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முகமது குதுரதுல்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: