பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் குறைவாக கிடைப்பதால் கருவாடு விற்பனை மந்தம்

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடித் துறைமுகத்தின் மூலம் தினந்தோறும் 3500 விசைப்படகுகள்,300 பைபர் படகுகள் மற்றும் 300 நாட்டு படங்கள் மூலம்5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தினந்தோறும் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.இந்நிலையில் தடை காலத்துக்குப் பிறகு மீண்டும் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

தடை காலத்துக்கு பிறகு இரண்டு அல்லது மூன்று தினங்கள் மட்டும் ஓரளவுக்கு மீன்கள் திருப்தியாக கிடைத்து வந்த நிலையில் படிப்படியாக மீன் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் கடலுக்குள் விசைப்படகுகள் மூலம் செல்லும் மீனவர்கள் அதிரருப்தியுடன் போதிய மீன் கிடைக்காமல் திரும்பி வருகின்றனர். இதனால் விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வரும் மீனவர்கள் கவலை அடைந்து வருகின்றனர்.அவர்கள் எதிர்பார்த்ததுபோல் மீன்கள் கிடைக்காததால் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.

மீன்கள் குறைந்த அளவே கிடைப்பதால் கருவாடு உலரவைக்கும் பணியும் மந்தமாகி கருவாடு உற்பத்தியும் குறைந்து காணப்படுகிறது. அதிக விலை போகும் மத்தி,கிழிசல், கானாங்கழுதை,வஞ்சரம், கவலை மற்றும் கிழங்கான் உள்ளிட்ட மீன்கள் அதிகமாக கிடைத்தால்தான் கருவாடு மூலம் வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும்.ஆனால் அதிக விலை போகும் சத்து நிறைந்த மீன்கள் கிடைக்காததால் கருவாடுகள் உலர வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வகை கருவாடு களின் விலை ஒரு கிலோ ரூ 100 முதல் 150 வரை விற்பனையாகும். ஆனால் இந்த வகையான மீன்கள் கிடைக்கவில்லை.அதற்கு பதிலாக சிறிய சன்னரக வகையான கருவாடுகள் மட்டும் தற்போது பழையார் துறைமுகத்தில் உலர வைக்கப்பட்டு வருகின்றன.

இதில் நெத்திலி, காரை,ஊட்டான், நகரை கல்லுலை ஆகியவை சிறிய ரக மீன்கள் உலரவைத்து கருவாடு ஆக்கப்படுகின்றன. சிறிய ரக கருவாடு களின் விலை கிலோ ரூ 25 முதல் 30 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த மீன்கள் கிடைப்பதும் மிகவும் குறைந்துள்ளது. சென்ற வருடத்தில் அதிக விலை போகக் கூடிய கருவாடு அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டன.

ஆனால் இந்த வருடம் தடை காலத்துக்குப் பிறகு சிறிய ரக குறைந்த விலையில் விற்பனை ஆகக்கூடிய சன்ன ரக மீன்கள் கருவாடாக உலர வைக்கப்படுகின்றன.

அதுவும் இந்தச் சன்ன ரக மீன்களும் குறைந்த அளவே கிடைப்பதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து பழையாறு கருவாடு வியாபாரிகள் சங்க தலைவர் பொன்னையா கூறுகையில்,சென்ற வருடம் தடை காலத்திற்கு பிறகு அதிக விலை போகக் கூடிய மீன்கள் கிடைத்ததால் கருவாடு வியாபாரத்தின் மூலம் மீனவர்கள் லாபம் அடைந்தனர்.

ஆனால் இந்த வருடம் அதிக விலை போகக் கூடிய மீன்கள் கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது.சிறிய ரக மீன்கள் மட்டுமே கிடைப்பதால் குறைந்த அளவு கருவாடு மட்டுமே தயாரிக்க முடிகிறது.இதன் மூலம் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை.இதனால் கருவாடு வியாபாரிகள் அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்தார்.

Related Stories: