நரிப்பையூர் கடற்கரை முதல் குதிரைமொழி வரை புதிய சாலை அமைக்க வேண்டும்-மீனவர்கள் கோரிக்கை

சாயல்குடி : சாயல்குடி அருகே நரிப்பையூர் கடற்கரை சாலை முதல் ஐந்து ஏக்கர், குதிரை மொழி வரை புதிய சாலை அமைக்க வேண்டும் என மீனவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சாயல்குடி அருகே நரிப்பையூர், வெள்ளப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களும், குதிரைமொழி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களும், அருகிலுள்ள பனை காட்டில் தனித்தனியாக பனைதொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளிலும் வசித்து வருகின்றனர்.

குதிரைமொழி அருகே உள்ள 5 ஏக்கர் கடற்கரையில் சுமார் 2 கிலோமீட்டர் சுற்றளவில் இரண்டு பக்க மணல்மேடு, தூண்டில் வளைவுபோன்று அமைந்துள்ளது. ஒரு பக்கம் ஆக்ரோசமான அலையும் மற்றொரு பக்கம் அமைதியான சூழலில் இரண்டு பக்கம் கடலால் சூழப்பட்டிருந்தாலும் கூட, ஐந்திற்கும் மேற்பட்ட சுவையான நல்ல தண்ணீர் கிணறுகள் அமைந்துள்ளது.

 இங்கிருந்து சாயல்குடி பேரூராட்சி மற்றும் நரிப்பையூர் கிராமங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது.

தென்கிழக்கு பகுதியில் ஆபத்துமிக்க அழகிய உப்பு பாறைகள், சிப்பி பாறைகள், கேக் போன்ற தோற்றமுடிய கடல்புற்கள் வளர்ந்த அழகிய பாறைகளும் உள்ளன. இதனை பார்க்க நாள்தோறும் சாயல்குடி பகுதி கிராம மக்கள், சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர். இப்பகுதி மிக ஆழமானது என்பதால் மீன்பிடித் தொழில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மீனவர்கள் வலை உலர்த்துதல், மீன் காயப்போடுதல், படகுகளை பழுது பார்த்தல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர். பனைமரங்கள் அதிகமாக உள்ளதாலும், தற்போது பனை மர சீசன் என்பதாலும் தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நரிப்பையூர் கடற்கரை சாலை முதல் குதிரைமொழி வரையிலான சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.

இருபுறமும் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரத்தால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு, அவசரத்திற்கு ஆட்டோவில் கூட செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருவதாக மக்கள் கூறுகின்றனர்.

அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடலுக்கு மீன் பிடிக்க வாகனங்களில் செல்ல முடியவில்லை என மீனவர்கள் கூறுகின்றனர். எனவே சாலை வசதியை செய்துகொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: