முதுமக்கள் தாழியுடன் கண்டெடுக்கப்பட்ட தங்க அணிகலன்கள் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பு

சிவகங்கை : காளையார்கோவில் அருகே முதுமக்கள் தாழி உள்ள இடத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்கள் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.காளையார்கோவில் அருகே கொல்லங்குடி ஊராட்சி, உசிலனேந்தல் கண்மாய் பகுதியில், சிவகங்கை தொல்நடைக்குழுவினர் நடத்திய மேற்பரப்பு கள ஆய்வில் முதுமக்கள் தாழி ஓடுகளுக்கிடையே தங்கத்தினாலான குழாய் வடிவிலான இரண்டு பொருட்கள் கிடைத்தன. இவற்றை தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் காளிராசா தெரிவித்ததாவது: இங்கு கிடைத்த பொருட்கள் தாலி போன்ற கயிற்றுச் சரடில் கோர்த்து அணியக்கூடிய குண்டுமணி என அழைக்கப்படும் அணிகலனாக இருக்கலாம். தாலிச்சரடில் உள் நுழைத்து கோர்த்து அணியப்படும் தங்கத்தாலான இப்பொருள்களுள் நீண்டு குழாய் போல் இருப்பதை யானைக் குழாய் என்றும், குழாய் என்றும், அழைக்கின்றனர்.

மேலும் நீட்சி இல்லாமல் சிறிய அளவில் உள்ளதை மணி என்றும், குண்டுமணி என்றும், அழைக்கின்றனர். ஒன்று நல்ல நிலையிலும் மற்றொன்று சிதைந்த நிலையிலும் உள்ளது. இரண்டும் ஒரே இடத்தில் கிடைத்ததாலும், ஒன்று சிதைவுற்று இருப்பதாலும் இது பழமையானதாகவும், முதுமக்கள் தாழிக்குள் இருந்து வெகு நாள்பட்டு ஓடுகளோடு வெளிப்பட்டிருக்கலாம். இப்பகுதியில் முதுமக்கள் தாழிகள் முற்றிலும் சிதைந்த நிலையில் வெறும் ஓடுகளாய் பரந்து பட்டு மேற்பரப்பில் காணப்படுகிறது. இவ்வாறான மேடுகள் அடுத்தடுத்து உள்ளன. கண்டெடுக்கப்பட்ட இரண்டு குண்டுமணிகள் குறித்து தொல்லியல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்ட தொல்லியல் அலுவலர் பரத்குமார் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் அலுவலர் சுரேஸ் ஆகியோர் முதுமக்கள் தாழி உள்ள இடத்தை பார்வையிட்டனர். பின்னர் அங்கு கிடைத்த தங்கத்தாலான பொருள்களை தொல்நடைக்குழுவினர் அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை தொல்நடைக் குழு நிர்வாகிகள் நரசிம்மன், பிரபாகரன், சரவணன், முத்துக்குமார், பிரேம்குமார், வருவாய்த்துறை உதவியாளர் சுரேஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: