காட்டுப்பன்றிகள் தொல்லையால் நெல், வாழை விவசாயத்திற்கு குட்பை-பூக்கள் பயிரிடும் விவசாயிகள்

திருப்புவனம் : திருப்புவனம் தாலுகாவில் காட்டுப்பன்றிகள் தொல்லையால் நெல், வாழை சாகுபடி பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பூக்கள் சாகுபடிக்கு மாறி வருகின்றனர்.வைகை ஆற்றின் கரையிலுள்ள திருப்புவனம், மானாமதுரை வட்டாரங்களில் வாழை, தென்னை, கரும்பு, நெல் உள்ளிட்டவை பிரதானமாக விவசாயம் செய்யப்படுகிறது. கிராமப்புற கண்மாய்களில் கடந்த ஐந்து வருடங்களாக ஏராளமான காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. இவை இரவு நேரங்களில் வயல்களில் உள்ள வாழை, கரும்பு உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி விடுவதால் விவசாயிகள் பலத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். காட்டுப்பன்றிகளை ஒழிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் சமீப காலமாக விவசாயிகள் மல்லிகை பூ மற்றும் கொண்டை, மல்லி பூ விவசாயத்திற்கு மாறி வருகின்றனர்.

இது குறித்து பறையன்குளம் விவசாயி சந்திரன் கூறுகையில், வில்லியரேந்தல், பனையனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை, செண்டு மல்லி பயிரிட்டுள்ளோம். காட்டுப்பன்றிகள் தொல்லையால் எங்கள் பகுதியில் 7 விவசாயிகள் நெல், வாழை பயிரை விட்டுவிட்டு, மலர் சாகுபடிக்கு மாறியிருக்கிறோம். மல்லிகை பயிரிட்ட ஆறு மாதத்தில் இருந்து அறுவடை ஆரம்பிப்பதால் தொடர்ச்சியாக 15 நாட்கள் வரை பூக்கள் அறுவடை செய்கிறோம். ஓரளவுக்கு லாபம் கிடைக்கிறது. ஒரு மாதத்திற்கு களை எடுப்பது, உரம் வைப்பது போன்றவற்றில் ஈடுபடுகிறோம். மீண்டும் 15 நாட்களுக்கு பூக்கள் அறுவடை நடைபெறுகிறது.

சீசனை ஒட்டி மல்லிகை பூ கிலோ 300 ரூபாயில் இருந்து ஆயிரத்து 600 ரூபாய் வரை கிடைக்கிறது. சிறு குறு விவசாயிகளுக்கு மினி டிராக்டர், பவர் டிரில்லர் உள்ளிட்ட விவசாய கருவிகள் மானிய விலையில் வழங்க வேண்டும். விவசாய பணிகளுக்கு ஆட்கள் தட்டுப்பாடு இருப்பதால் பணிகள் தாமதமாக நடைபெறுகிறது. குடும்பத்தினர் அனைவரும் இணைந்து விவசாயம் செய்கிறோம். தற்போது ஆனி மாதம் பிறந்துள்ள நிலையில் பூக்கள் விளைச்சலுக்கு வந்துள்ளன. அடுத்து ஆவணி மாதம் விலை கூட வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

Related Stories: