ஜவுளி உற்பத்தியாளர்கள் காட்டன் நூலுக்கு பதிலாக பாலியஸ்டருக்கு மாறுவதால் பஞ்சு விலை குறைகிறது-ஒரு கேண்டி விலை ₹20 ஆயிரம் வரை சரிவு

சேலம் : ஜவுளி உற்பத்தியாளர்கள் காட்டன் நூலுக்கு பதிலாக ரயான், பாலியஸ்டர் நூலுக்கு மாறி வருவதால், கடந்த சில மாதமாக உச்சத்தில் இருந்த பஞ்சு விலை குறையத் ெதாடங்கியுள்ளது. பஞ்சு ஒரு கேண்டி ₹20 ஆயிரம் வரை விலை சரிந்துள்ளதாக நூல் வியாபாரிகள் தெரிவித்தனர்.இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், குஜராத், மத்திய பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் பஞ்சு இந்தியாவில் பல பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 9 மாதமாக நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டது. கடந்தாண்டு செப்டம்பரில் பஞ்சு ஒரு கேண்டி (356 கிலோ) ₹54 ஆயிரத்திற்கு விற்றது. சில நாட்களுக்கு முன்பு ₹1.10 லட்சம் என விலை உயர்ந்தது.

 இந்த விலை உயர்வை கண்டித்து கடந்த ஏப்ரலில் திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம், கரூர் உள்பட பல  மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள், நூல் வியாபாரிகள வேலைநிறுத்தம், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. உற்பத்தியாளர்கள், நூல் வியாபாரிகள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு மீண்டும் பஞ்சு விலை ஏறியது.

நூல் விலையை கண்டித்து மீண்டும் கடந்த மே மாதத்தில் கோவை, திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல கட்ட போராட்டத்திற்கு பிறகும் நூல் விலை குறையாமல் ஒரே விலையில் விற்கப்பட்டது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் ரயான், பாலிஸ்டர் நூலுக்கு மாறி வருகின்றனர். இதையடுத்து ஜவுளி உற்பத்தி அதிகரித்துள்ளதால் உச்சத்தில் இருந்த பஞ்சு விலை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது என்று நூல் வியாபாரிகள் ெதரிவித்தனர்.

இது குறித்து சேலம் மாவட்ட நூல் வியாபாரிகள் சங்க தலைவர் ராசி.சரவணன் கூறுகையில், இந்த பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ₹100 கோடி அளவுக்கு ஜவுளிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இத்தொழிலை நம்பி பல லட்சம் பேர் உள்ளனர். கடந்த மே மாதம் ஒரு கேண்டி ₹1.10 லட்சமாக அதிகரித்தது. இந்த விலைக்கு நூல் வாங்கி ஜவுளி உற்பத்தி செய்தால் உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று பலர் உற்பத்தியை குறைத்து கொண்டனர்.

அதேபோல் நூல் மில்களிலும் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நூல் உற்பத்தி நடந்தது. விசைத்தறி கூடங்கள் மூன்று ஷிப்டில் ஒரு ஷிப்ட் மட்டுமே நடந்தது. நூல் விலை உயர்வால் உற்பத்தி கேட்டு ஆர்டர் கொடுக்கும் வியாபாரிகளும் காட்டன் நூலுக்கு பதில் ரயான், பாலிஸ்டர் நூலில் ஜவுளியை உற்பத்தி செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளனர். தற்போது ரயான், பாலிஸ்டர் நூல் 60 சதவீதம், காட்டன் நூல் 40 சதவீதம் கொண்டு ஜவுளி உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 20 நாளில் பஞ்சு விற்பனை 20 முதல் 30 சதவீதம் சரிந்தது. இதனால் ஸ்டாக் வைத்திருப்போர் பஞ்சு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

பஞ்சு தேவை அதிகரிப்பால் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பருத்தி சாகுபடி பரப்பும் அதிகரித்துள்ளது. மேலும் சீனா, இந்தோனேஷியாவில் இருந்து ரயான், பாலிஸ்டர் நூல் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் பஞ்சு விலை குறையத் தொடங்கியுள்ளது.

கடந்த மே மாதத்தில் ₹1.10 லட்சத்திற்கு விற்ற ஒரு கேண்டி பஞ்சு படிப்படியாக விலை சரிந்து நேற்று முன்தினம் ₹90 ஆயிரத்திற்கு விற்றது. ஒரு கேண்டிக்கு ₹20 ஆயிரம் வரை சரிந்துள்ளது. பஞ்சு ஸ்டாக் வைத்திருப்போர் இனியும் பஞ்சு ஸ்டாக் வைத்தால் அவர்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும். மேலும், சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தியும் விற்பனைக்கு வர இருக்கிறது. அதனால் இன்னும் 2 மாதத்தில் பஞ்சு அதிகளவில் வர இருப்பதால் மீண்டும் பழைய விலைக்கு வர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: