சிறுத்தை, செந்நாய், புலிகள் சுதந்திரமாக நடமாடும் பாம்பாடும் சோலையை பார்த்து ரசிக்க அனுமதி-மூணாறு பயணத்தில் இதை மிஸ் பண்ணாதீங்க...

மூணாறு : மூணாறு அருகே பாம்பாடும் சோலை தேசியப் பூங்காவில் சிறுத்தைகள், செந்நாய்கள், புலிகள், யானைகள், காட்டெருமைகள் அதிகளவில் வலம் வருகின்றன. அனுமதிக்கபட்ட நாட்களில் வனத்துறையின் அனுமதி பெற்று சுற்றுலாப் பயணிகளும் பூங்காவை வலம் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம், மூணாறிலிருந்து சுமார் 37 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பாம்பாடும் சோலை தேசியப் பூங்கா. இடுக்கி மாவட்டத்தில் உள்ள மிகச்சிறிய தேசியப் பூங்காவான இது கேரளா, தமிழ்நாடு மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ளது. கேரள வன மற்றும் வனவிலங்குத்துறை, மூணாறு வனவிலங்குப் பிரிவின் உட்பட்ட பகுதியாக இந்த பூங்கா உள்ளது. இரவிகுளம் தேசிய பூங்காவுடன் தொடர்புடைய மித பசுமைமாறா சோலைக்காடுகளையும் இந்த பூங்கா உள்ளடக்கி உள்ளது.

இப்பகுதியில் பல்வேறு வகையான மருத்துவ மூலிகைகள் மற்றும் தைல மரங்கள் உள்ளன. அவை குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு அழிந்து வரும் உயிரினங்களான கரும்வெருகு, மலை அண்ணான் பாதுகாக்கபட்டு வருகிறது. மேலும், சிறுத்தைகள், செந்நாய்கள், புலிகள், யானைகள், காட்டெருமைகள், சோலைமந்தி, காட்டெருது, நீலகிரி மந்தி போன்றவை இப்பூங்காவின் முக்கிய விலங்குகளாக உள்ளது.இங்கு அதிகளவில் காட்டு எருமைகள் சுற்றித்திரிகின்றன.

அதுபோல் கருப்பு புறா, குட்டை இறக்கையன், இளவேனில் தொங்கும் கிளி, நீலப்பாறை த்ரஷ், நீல மூடிய ராக் த்ரஷ் மற்றும் நீலகிரி ஈப்பிடிப்பான் கருப்பு மற்றும் ஆரஞ்சு ஈப்பிடிப்பான் ஆகிய பறவைகளும் காணப்படுகின்றன. இப்பூங்காவில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அருகிலுள்ள பழைய கொடைக்கானல் - மூணாறு சாலை மூடப்பட்டுள்ளது.

வட்டவடை செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் உள்ள சோதனைச் சாவடியில், இப்பூங்காவின் நுழைவாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கபட்ட நாட்களில் வனத்துறையின் அனுமதி பெற்று சுற்றுலாப் பயணிகள் பூங்காவை வலம் வரலாம். மேலும், ஆராய்ச்சிக் குழுவினருக்கு இப்பூங்காவின் அழகை அனுபவிக்க வனத்துறை வாட்ச் டவர், தங்கும் வசதி என பல ஏற்பாடுகளை செய்துள்ளது.

Related Stories: