வெயில் சுட்டெரித்த போதிலும் குறைவின்றி தண்ணீர் விழும் அகஸ்தியர் அருவி

விகேபுரம் : ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் அகஸ்தியர் அருவியில் குறைவின்றி தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குளித்து மகிழ்ந்தனர்.

களக்காடு மலைப்பகுதியில் உள்ள அருவிகளில் மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர் விழும். குற்றாலத்தில் உள்ள அருவிகளில் சீசன் காலங்களில் மட்டுமே தண்ணீர் விழும்.

ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பாபநாசம் மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். இதனால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கினர். தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் சுட்டெரித்த போதிலும் அருவியில் தண்ணீர் குறைவின்றி கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அகஸ்தியர் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். குற்றாலம் அருவிகளில்

தண்ணீர் குறைவாக விழுவதால் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அகஸ்தியர் அருவிக்கு படையெடுத்து வந்தனர்.

அருவிக்குச் செல்லும் அனைத்து வாகனங்களையும் பாபநாசம் சோதனைச்சாவடியில் தடுத்து,  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் கொண்டு செல்லப்படுகிறதா என வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களையும் மதுபான பாட்டில்களையும் அங்கேயே அழித்தனர். இதனால் பாபநாசம் வன சோதனைச்சாவடி முதல் பாபநாசம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை வரை சுற்றுலா பயணிகள் வாகனங்கள்  சோதனைக்காக அணிவகுத்து நின்றன.

Related Stories: