திண்டிவனம் அருகே சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து-15 பேர் படுகாயம்

திண்டிவனம் : திண்டிவனம் அருகே சுற்றுலா சென்று திரும்பிய வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையிலிருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊட்டி, ஒகேனக்கல் மற்றும் ஆன்மிக தலங்களுக்கு குடும்ப சுற்றுலாவாக வேனில் 18 பேர் சென்றுள்ளனர். சுற்றுலா முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர். வேனை சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த பொன்னன் மகன் மணிகண்டன் (31) என்பவர் ஓட்டி சென்றார்.

நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மேல்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, வேனின் வலதுபுற பின்பக்க டயர் வெடித்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் பாலசுப்ரமணியன் (51), பெங்களூர் கேஜிஎப் நகரை சேர்ந்த பில்பிரட் மனைவி கவுதமி (28), சென்னை ஐசிஎப் காலனியை சேர்ந்த திருநாவுக்கரசு (52), மடிப்பாக்கம் மேனகா (60), காட்டுப்பாக்கம் பிரியங்கா (21), அடையாறு பிரேமலதா (48), காட்டுப்பாக்கம் பிரிலனிகா (15), சசிரேகா (50), மார்பிரேட் (52) உள்ளிட்ட 15 பேர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் காவல் நிலைய போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு, மூன்று 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சாலையில் கவிழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வேனை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: