கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பிசுபிசுக்கிறது பிளம்ஸ், பேரிக்காய் விவசாயம்

* சந்தைப்படுத்தல் சிரமங்களால் சாகுபடியில் ஆர்வம் குறைகிறது

* தமிழக அரசு உதவ விவசாயிகள் கோரிக்கை

கொடைக்கானல் : கொடைக்கானலில் பேரிக்காய், பிளம்ஸ் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என மலைப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய பழ வகைகளில் பேரிக்காய், பிளம்ஸ் பழங்கள் முக்கியமானவை. ஒரு பிளம்ஸ் பழம் ஒரு ஆப்பிளை விட அதிக சத்து மிகுந்தது. அதேபோல, இரும்புச்சத்து அதிகம் கொண்ட பழ வகைகளில் பேரிக்காய் முக்கியமானதாகும். இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. கொடைக்கானல் பெருமாள்மலையை அடுத்த வில்பட்டி, அட்டுவம்பட்டி, குறிஞ்சி நகர், பேத்துப்பாறை, வடகவுஞ்சி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பிளம்ஸ், பேரிக்காய் மரங்கள் அதிகமாக இருந்தது.

பொதுவாக ஆண்டுதோறும் மே மாதங்களில் இங்கு பிளம்ஸ் பழங்கள் அதிக அளவில் கிடைக்கும். கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரை துவக்க மகசூல் காலத்தில் விற்கப்படும். பிறகு, கிலோ பிளம்ஸ் பழம் சராசரியாக ரூ.50 முதல் 80 ரூபாய் வரை விற்பனைக்கு கிடைக்கும். இதேபோல பேரிக்காய் ஒரு கிலோ ரூ.40 முதல் 50 ரூபாய் வரை விற்கப்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கொடைக்கானலில் பிளம்ஸ் பழம், பேரிக்காய் மகசூல் வெகுவாக குறைந்து வருகிறது.

பேரிக்காய், பிளம்ஸ் பழங்கள் அறுவடைக்கு பின்னர் சந்தைப்படுத்துதலிலும் பல்வேறு சிரமங்கள் இருந்து வருகிறது. நிலையான விலை கிடைக்காததால், பேரிக்காய், பிளம்ஸ் பழங்கள் சாகுபடியில் விவசாயிகளின் ஆர்வம் குறைந்து வருகிறது. எனவே, பேரிக்காய், பிளம்ஸ் பழம் விவசாயத்தை காக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 மேலும், இந்த பழங்களில் கிடைக்கக்கூடிய ஜாம் உள்ளிட்ட பழ ரசங்கள் தயாரிக்கக்கூடிய சிறு தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என மலைக்கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல் மலைப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘கொடைக்கானலில் விளையக்கூடிய பேரிக்காய், பிளம்ஸ் பழங்கள் மிகுந்த ருசியாக இருக்கும். இதற்கு கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நல்ல கிராக்கி உள்ளது. பல நூறு ஏக்கர் அளவிற்கு பேரிக்காய், பிளம்ஸ் பழ மரங்கள் வைக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் மாறி வரும் இயற்கை சூழல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் காரணமாக பிளம்ஸ் பழம் மரங்கள், பேரிக்காய் மரங்கள் அழிவை நோக்கி போய் கொண்டிருக்கிறது. எனவே, பேரிக்காய் , பிளம்ஸ் பழங்களின் விவசாயத்தை அரசு காப்பாற்ற வேண்டும்’’ என்றனர்.

Related Stories: