வேடசந்தூர் அருகே பரபரப்பு கள்ளக்காதலி வெட்டிக் கொலை

* சாக்குமூட்டையில் கட்டி சடலம் வீச்சு

* தப்பி ஓடிய கள்ளக்காதலன் கைது

வேடசந்தூர் : வேடசந்தூர் அருகே கள்ளக்காதலியை வெட்டிக் கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி சாலையோரம் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள பூலாங்குளம் பகுதியில் சாக்குமூட்டையில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக, வேடசந்தூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், இறந்து கிடந்தவர் கீழ்தப்பம்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரி (28) என்பது தெரிய வந்தது. இவரது கணவர் அமுல்ராஜ் (30). இவர், ஆந்திராவிற்கு கஞ்சா கடத்தி சென்றபோது, அங்கு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார்.

தனியாக வசித்து வந்த பாண்டீஸ்வரிக்கு, வேடசந்தூர் அருகே உள்ள சேடபட்டியை சேர்ந்த கௌசிக் பாண்டி (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இரண்டு மாதமாக கௌசிக் பாண்டியும், பாண்டீஸ்வரியும் ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை பாண்டீஸ்வரியுடன் ஏற்பட்ட தகராறில், கௌசிக் பாண்டி அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி, சாக்குமூட்டையில் கட்டி, பூலாங்குளம் பகுதியில் சாலையோரத்தில் வீசிச் சென்றார்.

சடலத்தை மீட்ட வேடசந்தூர் டிஎஸ்பி மகேஷ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பாண்டீஸ்வரியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கௌசிக் பாண்டியை வேடசந்தூர் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தச் சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலை வழக்கில் கைதானவர்

பாண்டீஸ்வரி முதல் கணவரை விட்டுவிட்டு, இரண்டாவதாக தினேஷ்குமார் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். தினேஷ்குமாருக்கு திருமணமாகி சுஷ்மிதா என்ற மனைவி இருந்தார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது, தினேஷ்குமாரும், பாண்டீஸ்வரியும் காரில் ஏற்றி சென்று கூம்பூர் பகுதியில் சுஷ்மிதாவின் கழுத்தை பாண்டீஸ்வரி நெரித்து கொலை செய்துள்ளர். இதுதொடர்பாக கூம்பூர் போலீசார் வழக்குப்பதிந்து தினேஷ்குமார் மற்றும் பாண்டீஸ்வரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளிவந்த பாண்டீஸ்வரி, தினேஷ்குமாரை கைவிட்டு மூன்றாவதாக சேடபட்டியைச் சேர்ந்த கௌசிக் பாண்டியுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொன்றது ஏன்?

பாண்டீஸ்வரியும், கௌசிக் பாண்டியும் செல்போன் மூலம் பல்வேறு நபர்களை தொடர்பு கொண்டு அவர்களை தனிமையான இடத்திற்கு வரவழைப்பது வழக்கமாம். அப்படி வருபவர்களிடம் பாண்டீஸ்வரி ஜாலியாக பேசிக் கொண்டிருப்பாராம். அப்போது மறைந்திருந்து வரும் கௌசிக் பாண்டி, ‘எப்படி எனது மனைவியுடன் பேசலாம்’ என மிரட்டி அவர்கள் வைத்திருக்கும் பணம், நகைகளை பறித்துக் கொள்வது வழக்கம். இதை பங்கு போடுவதில் பாண்டீஸ்வரிக்கும், கௌசிக் பாண்டிக்கும் தகராறு ஏற்பட்டதும், இதில் ஆத்திரம் அடைந்த கௌசிக் பாண்டி நேற்று காலை கோவில்பட்டி பிரிவு பஸ் ஸ்டாப் அருகே வெட்டிக் கொலை செய்து, சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி பூலாங்குளம் பகுதியில் வீசியதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories: