தாராபுரம் அருகே ஆடுகளை வேட்டையாடிய பெண் சிங்கம்?- வீடியோ வைரல்-கிராம மக்கள் பீதி

தாராபுரம் :  திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் கிழக்கு சடையபாளையம் அருவங்காடு தோப்பு பகுதி உள்ளது. இங்கு ஏராளமான மின் காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றாலை நிழலின்  கீழ் பெண் சிங்கம் ஒன்று ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனை சிலர் வீடியோ எடுத்து வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாக வருகிறது.

மேலும், அப்பகுதியில் உள்ள 3 ஆடுகளையும் சிங்கம் தாக்கி கொன்று ரத்தத்தை குடித்து சென்றதாகவும், இறந்து கிடக்கும் ஆடுகளின் புகைப்படங்களும் பரவி வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2 ஆண்டுக்கு முன் அமராவதி வனச்சரகத்தில் இருந்து வழிதவறி வந்த மான் மற்றும் காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் குண்டடம் பகுதி காட்டுக்குள் பதுங்கி இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்து மீண்டும் அதன் வாழ்விடங்களுக்கு விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் ஏற்கனவே நடந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக எந்த வனப்பகுதியிலும் சிங்கம் இல்லாத நிலையில் தற்போது இப்பகுதியில் காற்றாலை நிழலில் சிங்கம் ஓய்வெடுப்பது போன்று வீடியோ எடிட் செய்து யாரேனும் வௌியிட்டுள்ளார்களா? அல்லது உண்மையிலேயே அப்பகுதியில் சிங்கம் நடமாட்டம் உள்ளதா? என்று வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அச்சத்தை போக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கமா? வனத்துறை விளக்கம்

காங்கயம் வனச்சரக அலுவலர் தனபாலன் கூறுகையில்,``இந்தியாவில் தற்போது குஜராத் மாநிலம் கிர் காடுகளில் மட்டுமே சிங்கம் வசிக்கின்றன. தமிழகத்தில் 100 சதவீதம் சிங்கம் கிடையாது. வெளியான வீடியோ காட்சிகள் அநேகமாக அங்கு எடுக்கப்பட்டது போன்று உள்ளது. ஆடுகளை வேட்டையாடியது பெரிய நாய் உள்ளிட்ட சாதாரண விலங்குகளாக இருக்கலாம். குண்டடம் அருகே உள்ள சடையபாளையத்தில் உள்ளதாக வெளியாகி உள்ள வீடியோ தவறானது. இந்த பகுதி மக்கள் அச்சப்பட தேவை இல்லை’’ என்றார்.

Related Stories: