11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: மாநில அளவில் 95.56% தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்..!

சென்னை: 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத் தேர்வு கடந்த மாதம் 10ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடந்தது. மொத்தம் 8 லட்சத்து 85 ஆயிரத்து 53 மாணவர்கள் தேர்வு எழுத பெயர்களை பதிவு செய்திருந்தனர்.  தமிழக பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 69 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 917 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 42 ஆயிரத்து 989 பேர் மாணவிகள். மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். புதுச்சேரியில் இயங்கும் பள்ளிகளில் இருந்து 15 ஆயிரத்து 145 மாணவ, மாணவியர் பதிவு செய்திருந்தனர்.  

இவர்கள் தவிர பிளஸ் 1 தேர்வை தனித் தேர்வர்களாக தேர்வு எழுத 5 ஆயிரத்து 673 மாணவர்களும் எழுதினர். மாற்றுத்திறனாளிகள் 5 ஆயிரத்து 299 பேரும், சிறைவாசிகள் 99 பேரும் எழுதினர். பள்ளி மாணவர்களுக்காக 3119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தனித்தேர்வர்களுக்காக 115 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இதுதவிர சிறைத் தேர்வு மையங்கள் 9 அமைக்கப்பட்டன. பள்ளி மாணவர்களில் அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் மொத்தம் 5 லட்சத்து 50 ஆயிரத்து 186 மாணவர்களும், வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ்  மொத்தம் 2 லட்சத்து 69 ஆயிரத்து 77 மாணவர்களும், கலை பாடத் தொகுதியின் கீழ் 15 ஆயிரத்து 362 மாணவர்களும், தொழிற்கல்வி பாடத் தொகுதியின் கீழ் 50 ஆயிரத்து 428 மாணவர்களும் தேர்வு எழுதினர்.  

தேர்வு முடிந்த பிறகு ஜூன் மாதம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வந்தன. தற்போது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் முடிந்துள்ள நிலையில் 27ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதன்படி, இன்று காலை 10 மணிக்கு பிளஸ் 1 தேர்வு  முடிவுகளை தேர்வுத்துறை வெளியிட்டது. மாணவ, மாணவியர் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தமிழகம், புதுச்சேரியில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 8,43,675 பேர் எழுதியதில் 7,59,856 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். +1 தேர்வில் மாணவிகள் 94.99%, மாணவர்கள் 84.86% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 2,605 மேல்நிலை பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் 18 பேர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர். மாநில அளவில் 95.56% தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 95.44% தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் 2ம் இடத்திலும் உள்ளது. 80.02% தேர்ச்சியுடன் வேலூர் மாவட்ட கடைசி இடத்திலும் உள்ளது. கடந்த 2020 மார்ச் பொதுத்தேர்வில் தேர்ச்சி 96.04% ஆக இருந்த நிலையில் ந்தாண்டு 5.97%ஆக குறைந்தது.

Related Stories: