அதிகாரிகளின் பாஸ்வேர்டை திருடி வருமான வரித்துறையில் ரூ.1.39 கோடி கையாடல்

புதுடெல்லி: அதிகாரிகளின் பாஸ்வேர்டை திருடி, டிடிஎஸ் செலுத்தியதாக கணக்கு காட்டி ரூ.1.39 கோடி பணத்தை கையாடல் செய்த வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரித்து வருகிறது. உத்தர பிரதேச மாநிலம், முசாபர்நகரில் உள்ள வருமான வரித்துறை அலுவலக அதிகாரிகள் அபய் காந்த், சவுரவ் சிங், ரோகித் குமார். இவர்கள் மூவரும் மூத்த அதிகாரிகளின் கணினி பாஸ்வேர்டை தவறாகப் பயன்படுத்தி, வருமான வரி செலுத்தியவர்களுக்கு டிடிஎஸ் திருப்பி செலுத்தியதாக ரூ.1.39 கோடி பணத்தை கையாடல் செய்தனர். போலியான 11 வரி செலுத்துவோரின் பெயரில் கடந்த ஆகஸ்ட் 2020 முதல் ஆகஸ்ட் 2021 வரை, இந்த பண பரிமாற்றம் நடந்துள்ளது.

தங்களின் மண்டல எல்லைக்குள் வராத வரி செலுத்தியவருக்கு டிடிஎஸ் திருப்பி செலுத்தியதாக போலி கணக்கு காட்டியதில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இது குறித்து முசாபர்நகர் வருமான வரித்துறை அலுவலகத்தின் கூடுதல் ஆணையர் அளித்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், வருமான வரி அதிகாரிகள், பயனாளர்களிடம் சிபிஐ தற்போது விசாரணையை தொடங்கி உள்ளது.

Related Stories: