பாக்.கும், சீனாவும் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தும்: விமானப்படை தளபதி எச்சரிக்கை

புதுடெல்லி: ‘வடக்கு மற்றும்  மேற்கு எல்லைகளில் இருந்து எதிரிகள் ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்துவதற்கான ஆபத்துகள் உள்ளன,’ என்று விமானப்படை தளபதி வி.ஆர்.சவுதாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுதாரி நேற்று அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:

அனைத்து முனைகளிலும் இருந்து இந்தியாவுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது போன்ற ஒரு சூழலை எதிர்கொள்ளும் வகையில் ராணுவ கொள்கைகளை வகுப்பது முக்கியம். உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா நடத்தும் போரினால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை மாற்றங்களை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.  

நாட்டின் மேற்கு, வடக்கு (சீனா, பாகிஸ்தான்) எல்லைகளில்  நமக்கு சில சவால்கள் உள்ளன. இப்பகுதியில் இருந்து இந்தியா மீது ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்தப்படுவதற்கான அபாயம் உள்ளது. இதை எதிர்கொள்ளும் வகையில் 2 முனை  அவசரகால திட்டத்தை தயாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

படைகள் ஒருங்கிணைப்பு

விமானப்படை தளபதி சவுதாரி மேலும் கூறுகையில், ‘முப்படைகளையும் ஒருங்கிணைப்பதற்கான திட்டம் , ஆய்வுக் கட்டத்தில் இருக்கிறது. இதில் சில பிரச்னைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட வேண்டி உள்ளது. அதே நேரம், இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’’ என்றார். போர் வரும்போது, ஒவ்வொரு பகுதியிலும் ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றை ஒரே தளபதியின் கீழ் கொண்டு வந்து தாக்குதல் நடத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

Related Stories: