இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பு உத்தர பிரதேசத்தில் 2 எம்பி தொகுதிகளில் பாஜ வெற்றி: பஞ்சாப்பில் ஆம் ஆத்மிக்கு பின்னடைவு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாடியிடம் இருந்த 2 மக்களவை தொகுதிகளையும் பாஜ கைப்பற்றியுள்ளது. பஞ்சாப்பில் சங்ரூர் எம்பி தொகுதியை ஆம் ஆத்மி இழந்துள்ளது. திரிபுராவில் வன்முறை வெடித்தது. பஞ்சாப், உத்தர பிரதேசம், திரிபுரா, ஜார்கண்ட், ஆந்திரா மற்றும் டெல்லி மாநிலங்களில் காலியாக இருந்த 3 மக்களவை தொகுதிகளுக்கும், 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் கோட்டையாக கருதப்படும் ராம்பூர், அசம்கர்க் மக்களவை தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. ராம்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் கன்ஷியாம் லோதி, 42,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அசம்கர்க்கில் பாஜ வேட்பாளர் தினேஷ் லால் யாதவ், 8,679 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

உபி.யில் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ராம்பூர் எம்பி பதவியையும், இதே கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் அசம்கான் அசம்கர்க் தொகுதி எம்பி பதவியையும் ராஜினாமா செய்தனர். தற்போது, இந்த 2 தொகுதிகளையும் பாஜ பறித்து இருப்பது, அகிலேஷ் யாதவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பஞ்சாபில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், இக்கட்சியை சேர்ந்த முதல்வர் பக்வந்த் சிங் மான், சங்ரூர் தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இத்தொகுதியில் சிரோமணி அகாலி தளம் (அமிர்தரசஸ்) கட்சியின் தலைவர் சிம்ரன்ஜித் சிங் மான் வெற்றி பெற்றார். ஆம் ஆத்மி வேட்பாளரை இவர் 5,822 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். ஆனால், டெல்லி ராஜிந்தர் நகர் சட்டமன்ற தொகுதியை ஆம் ஆத்மி தக்கவைத்து கொண்டது.

திரிபுராவில் 4 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் ஜூபராஜ்நகர், சுர்மா, போர்டோவாலி ஆகிய 3ல் பாஜ வெற்றி பெற்றது. திரிபுராவின் பாஜ முதல்வர் மாணிக் சகா 17,181 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அகர்தலாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஜார்க்கண்டில் மந்தார் தொகுதியையும் காங்கிரஸ் கைப்பற்றியது. இம்மாநிலத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் டெபாசிட்டை இழந்தது. ஆந்திராவில் அட்மக்ரூ சட்டமன்ற தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றது.திரிபுராவில் வாக்கு எண்ணிக்கை நடந்தபோது காங்கிரஸ் அலுவலகம் முன்பாக, பாஜ - காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில், திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவர் பிரஜித் சின்கா உள்பட 19 பேர் காயமடைந்தனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கும்பலை கலைத்தனர்.

மோடி பெருமிதம்

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `உபி.யில் பாஜ வெற்றி பெற்றிருப்பது வரலாற்று சாதனை. ஒன்றியம், மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் இரட்டை இன்ஜின் பாஜ அரசுக்கு அளித்திருக்கும் ஆதரவை இது காட்டுகிறது,’ என கூறியுள்ளார்.

Related Stories: