×

வாழ்வென்பது பெருங்கனவு- கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்!

நன்றி குங்குமம் தோழி

ஆசிரியர் மேரி மேகலா

‘‘நான் ஒரு ஆசிரியை அல்லது ஒரு சமூக அக்கறையாளராக அறிமுகப்படுத்துவதைவிட முதலில் நான் ஒரு மனுஷி. அப்புறம், இயற்கையோடு இயைந்த ஆளாக என்னை சொல்லிக்கொள்வதில்தான் எனக்கு விருப்பம். எனக்கு மரம், காடுகள் மேல் இஷ்டம். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘காடு’ என்ற நாவலை வாசித்தேன்.

அந்த நாவலில் வரும் நாயகியின் பெயர் தெரியாததால் காட்டை அழித்து அணை கட்ட வரும் கான்ட்ராக்டர் அவனாகவே வனத்தில் வசிக்கும் நீலி என கருதி அவளுக்கு வனநீலி என ஒரு புனை பெயர் வைப்பான். கதையோட்டத்தில் அவளின் செயல்பாடு எனக்கு மிகவும் பிடித்தது என்பதால் அதையே எனது பெயராக உருவகப்படுத்திக் கொண்டேன்’’ என தனது புனை பெயருக்கான காரணத்தை கூறியவாறு தன் வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்துகொண்டார் ஆசிரியர் மேரி மேகலா.

“தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த பெருமகளூர்தான் எனது ஊர். அப்பா, அம்மா இருவருமே ஆசிரியர்கள். சிலர் சாதிக்கப் படைக்கப்பட்டிருப்பார்கள். என்னைச் சோதிக்கப் படைத்திருப்பானோ இறைவன் எனும் அளவிற்கு என்னுடைய பிறப்பே ஒரு பெரும் சோதனை. நான் கருவில் இருக்கும் போது, அம்மா என்னை வேண்டாம்ன்னு நினைத்து மாத்திரைகள் சாப்பிட்டாங்க. ஆனாலும் நான் கலையாமல் பிறந்தேன்னு அம்மா சொல்வாங்க.

அம்மா அப்போது சாப்பிட்ட மாத்திரைகள் என்னுடைய உடல் நிலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. எனக்கு நோயெதிர்ப்பு திறனே இல்லாமல் போனது. எப்போதும் உடல் படுத்திக் கொண்டே இருக்கும். பத்தாம் வகுப்பு வரை உடல் நிலை காரணமாக பல நாட்கள் பள்ளிக்கு செல்லாமல் இருந்திருக்கேன்.

மேல்நிலைப் பள்ளியில்தான் முதன்முதலில் படிப்பென்றால் என்னவென்று அறிந்தேன். உடல் நிலை பிரச்னையோடு வளர்ந்து வந்ததால், பார்க்க மிகவும் ஒல்லியாக இருப்பேன். அதைக் கொண்டு என்னை பலர் கிண்டல் செய்தாங்க. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளானேன். படிப்பிலும் கவனம் செலுத்த முடியவில்லை. எங்க வீட்டில் விடுதியில் சேர்த்தால் ஒழுங்காக படிப்பேன் என்று சேர்த்துவிட்டார்கள்.

நாங்க தங்கி படித்த விடுதி பெற்றோர்கள் இல்லாத பிள்ளைகள் தங்கி படிக்கும் விடுதி. அந்த விடுதியில் தான் ஒருத்தர் மேல் ஒருத்தர் அன்பு செலுத்துவது குறித்து தெரிந்து கொண்டேன். பெற்றோர் இல்லாமல் அன்புக்காக அங்கு ஏங்கும் குழந்தைகளை பார்த்த போது நான் பிறந்ததற்கான பணி என்ன என்று உணர்ந்தேன்.

என் வாழ்க்கையில் நான் என்னவாக இருக்க வேண்டும் என்று எனக்குள் ஒரு குறிக்கோளை ஏற்றுக் கொண்டேன். ஒன்று செவிலியர், அடுத்து அருட்கன்னியர் அல்லது ஆசிரியராக வேண்டும் என்று நான் தீர்மானித்து வீட்டில் என் விருப்பத்தை தெரிவித்தேன். முதல் இரண்டு பணியையும் அவங்க நிராகரிச்சிட்டாங்க. அதனால் என்னுடைய மூன்றாவது குறிக்கோளான ஆசிரியர் பணியினை தேர்வு செய்தேன். தஞ்சையில் உள்ள அரண்மனை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் வேலை கிடைத்தது.

எனக்கு மற்ற ஆசிரியர்கள் போல் பாடங்களை மட்டுமே சொல்லிக் கொடுக்க விருப்பமில்லை. இயற்கையுடன் சார்ந்து பாடங்களை சொல்லித் தர விரும்பினேன். அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிராமப்புற பள்ளியில் காலமுறை ஊதிய ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். எனக்கு மறுக்கப்பட்ட அன்பினை என் மாணவர்களுக்கு தாராளமாக அள்ளி வழங்கினேன்.

ஒவ்வொரு மாணவரும் மற்றவர் மேல் அன்பு செலுத்த கற்றுக் கொடுத்தேன். இதனால் ஒன்னாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒரு தாயாக மாறினான். மேலும் பள்ளியும் அதன் உடைமைகளும் எனது என்ற எண்ணத்தை மாணவர்கள் மனதில் பதிய வைத்தால் அவர்கள் வளர்ந்த பிறகு பொதுச் சொத்தை சேதப்படுத்த மாட்டார்கள். பள்ளி என்பதே சிறு சமுதாயம். மாணவர்களை சுய ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டுடன் வளர்த்து விட்டால், எதிர்கால சமுதாயம் பயப்பட தேவையில்லை’’ என்றவர் ஒவ்வொரு மாணவர்களும் உளவியல் குறித்த அறிவினை பள்ளியில் வளர்க்க வேண்டும் என்றார்.

‘‘உளவியல் குறித்த பாடங்கள் மட்டுமில்லாமல் அது செயல்முறையாக பயன்படுத்தப்பட வேண்டும். கல்வி என்பது உலகத்தில் வாழ மட்டுமல்ல. அதன் மூலம் உலகத்தைப் புரிந்துகொள்ளவும் நேசிக்கவும் கற்றுக் கொடுத்தேன். குறிப்பாக இயற்கை சார்ந்த விஷயங்கள். விதைகளை சேகரித்து அதை செடியாக பயிரிட்டு வளர்க்க ஆர்வமளித்தேன்.

மூலிகை செடிகளை வளர்ப்பது மட்டுமில்லாமல் அது எந்த பிரச்னைக்கு மருந்தாகும் என்பதையும் விளக்கினேன். இதில் குழந்தைகள் மட்டுமில்லாமல் பெற்றோர்களையும் இணைத்து செயல்பட வைத்தேன். அவர்கள் விதைத்த விதைகள் செடியாக துளிர்விட்டு மரமாகி பூப்பூத்து காய்ச்சது. பூச்செடிகள் பூத்துக் குலுங்கின. பள்ளியே ஒரு அழகான நந்தவனமாக மாறியது. தாங்கள் விதைத்த ஒவ்வொரு செடியையும் தங்களின் பிள்ளைகளாக பார்க்க ஆரம்பித்தார்கள். இதன் மூலம் சிறு புல் பூண்டு கூட இயற்கையின் கொடை என்று ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு என்னால் புரிய வைக்க முடிந்தது என்று நினைக்கும் போது நான் பெருமையாக உணர்கிறேன்.
 
மேலும் நாம் இந்த பூமிப்பந்தை இயன்றவரை வீணாக்கிவிட்டோம். இனி அவர்களுக்கானதாக அழகாக மாற்றி அவர்கள் கையிலே கொடுப்பதும் நம் கடமை. அதில் மாணவர்கள் உடன் பங்காளர்கள். இதுவே என் வாழ்வின் பிரபஞ்ச பெருங்கனவு. அதை நோக்கி என்னால் முடிந்த வரை பயணிப்பேன்” என்றார் மேரி மேகலா.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED கிச்சன் டிப்ஸ்