சென்னையில் தீவிர சோதனை குட்கா விற்ற 46 பேர் கைது: 51 கிலோ புகையிலை பறிமுதல்

சென்னை: சென்னை முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் வெளிமாநிலத்தில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி விற்பனை செய்ததாக ஆட்டோ டிரைவர் உட்பட 46 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 51 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை முழுவதும் குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை சென்னை முழுவதும் 12 காவல் மாவட்டங்களில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 46 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 51 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், ரூ.9,120 பறிமுதல் செய்யப்பட்டது.

குறிப்பாக, மயிலாப்பூர் கபாலி தோட்டம் பகுதியில் மாவா விற்பனை செய்து வந்த ரகு (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இரு்து 2.5 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், ஆட்டோவில் குட்கா பொருட்கள் கடத்தி வந்ததாக சாலிகிராம் விஜயராகவபுரத்தை சேர்ந்த அண்ணாதுரை (46), தி.நகர் தர்மாபுரத்தை சேர்ந்த பிரான்சிஸ் சேவியல் (49) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 46.6 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சைதாப்பேட்டை சாமியார் தோட்டம் பகுதியில் மாவா விற்பனை செய்து வந்த லட்சுமி (65) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2.5 கிலோ மாவா ரூ.8,470 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: