மணலி தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: பொதுமக்களுக்கு கண்ணெரிச்சல், மயக்கம்

திருவொற்றியூர்: மணலியில் தொழிற்சாலையில் இருந்து அவ்வப்போது வெளியேறும் அமோனியா வாயு கசிவால் பொதுமக்களுக்கு கண்ணெரிச்சல், மயக்கம் ஏற்படுகிறது. மணலி, சின்னசேக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக அதிகாலை நேரத்தில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கண்ணெரிச்சல், லேசாக மயக்கம் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதே நிலை நீடித்தால் இப்பகுதி மக்களுக்கு நுரையீரல் பிரச்னை, கண்பார்வை கோளாறு, குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் போன்ற பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மணலில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான எம்எப்எல் உரத் தொழிற்சாலையில் இருந்து அடிக்கடி இதுபோன்ற அமோனியா வாயு வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. மழை காலங்களில் துர்நாற்றம் அதிகமாகிறது.

சம்மந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் காற்றில் விஷ தன்மையை கண்டறிய நாங்கள் கருவி வைத்துள்ளோம். அதன்படி காற்றின் மாசு கட்டுப்பாட்டில்தான் உள்ளது என கூறுகின்றனர். ஆனாலும் தொடர்ந்து அமோனியா வாயு வெளியேறி துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கிறது. இந்த தொழிற்சாலையில் உரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயன மூலப்பொருட்களை கையாள்வதில் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர்.

இதனால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு நிலத்தடிநீர் சீரழிந்துவிட்டது. மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலை ஆய்வாளர்களும் தொழிற்சாலையை முறையாக கண்காணிப்பதில்லை. எனவே, அம்மோனியா வாயு பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உர தொழிற்சாலை மட்டுமின்றி மணலில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் ஆய்வு செய்து காற்று மற்றும் மண் வளம் பாதிப்பு குறித்து கண்டறிய வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: