நன்னடத்தை விதிமீறிய ரவுடிக்கு 236 நாள் சிறை

சென்னை: துரைப்பாக்கம் கண்ணகி நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சசிகுமார் (எ) புறா(29). இவர் மீது, எழும்பூர் காவல் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி உட்பட 14 குற்ற வழக்குகள் உள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 26ம் தேதி திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன் முன்பு ஆஜராகி, இனிமேல்  குற்றச்செயலில் ஈடுபடமாட்டேன் எனநன்னடத்தை உறுதி மொழி பத்திரம் எழுதி கொடுத்தார்.

ஆனால் அதை மீறி கடந்த மாதம் 30ம் தேதி கஞ்சா விற்றதாக அவரை போலீசார் கைது செய்தனர். நன்னடத்தை விதிமீறி மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்ட அவருக்கு 236 நாட்கள் பிணையில் வெளிவரமுடியாதபடி சிறை தண்டனை விதித்து துணை கமிஷனர் உத்தரவிட்டார். அதைதொடர்ந்து போலீசார் ரவுடி சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 புளியந்தோப்பு டிக்காஸ்டர் ரோட்டை சேர்ந்த தீனா (எ) தினகரன் (31) மீது புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், எம்கேபி.நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 12க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சரித்திர பதிவேடு ரவுடியான இவர், கடந்த மார்ச் மாதம் புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனை நேரில் சந்தித்து ‘’இனிமேல் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டேன்’’ என பிரமாண பத்திரம் எழுதி கொடுத்தார்.

ஆனால் அதை மீறி கடந்த மே மாதம் 29ம் தேதி எம்கேபி.நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 10ம் தேதி ஜாமீனில் வெளியேவந்த தினகரன் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட முயற்சி செய்வதாக புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ஜானகிராமனுக்கு தெரியவந்தது. இதையடுத்து பிரமாண பத்திரத்தை மீறிய தினகரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புளியந்தோப்பு துணை கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து தினகரனை 280 நாட்கள் சிறையில் அடைக்க துணை கமிஷனர் உத்தரவிட்டார்.

Related Stories: