புளியந்தோப்பு சரகத்தின் 8 காவல் நிலையங்களில் 4 குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் காலி:குற்ற வழக்குகளை விசாரிப்பதில் தொய்வு

பெரம்பூர்: புளியந்தோப்பு சரகத்தின் 8 காவல் நிலையங்களில் 4 குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், குற்ற வழக்குகளின் விசாரணை தேக்கமடைந்துள்ளன. எனவே, காலிப் பணியிடங்களுக்கு உடனடியாக இன்ஸ்பெக்டர்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் குற்ற செயல்களை தடுப்பதற்காக சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பரிவு என 2 பிரிவுகள் உருவாக்கப்பட்டு, 2 பிரிவுகளுக்கும் தனித்தனியாக இன்ஸ்பெக்டர்களை நியமித்து குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடிதடி, கொலை உள்ளிட்ட வழக்குகளை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டரும், திருட்டு சம்பந்தமான வழக்குகளை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரும் விசாரித்து நடவடிக்கை எடுப்பது வழக்கம்.

பல காவல் நிலையங்களில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் காலியாக உள்ளதால், அவர்களுக்கான பணியை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களே கூடுதலாக கவனித்து வரும் நிலை இருந்து வருகிறது. குற்றங்கள் குறைவாக நடைபெறும் காவல் நிலையங்களில் இம்முறை சாத்தியம் என்றாலும், குற்றச் செயல்கள் அதிகமாக நடைபெறும் காவல் நிலையங்களில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் இல்லாமல் அதனை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள் கூடுதலாக கவனிக்கும்போது பணிச்சுமை அதிகரித்து குற்றச் செயல்கள் அதிகரிக்கும் நிலை உள்ளது.

அந்த வகையில் சென்னையில் குற்ற செயல்கள் அதிகமாக நடைபெறும் புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் உள்ள 8 காவல் நிலையங்களில் 4 காவல் நிலையங்களுக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் இல்லாததால், அவர்களுக்கான பணியையும் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களே கூடுதலாக கவனித்து வருகின்றனர். புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட ஓட்டேரி காவல் நலையத்தில் ஜானி செல்லப்பா சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்து வருகிறார். அந்த காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இல்லாத காரணத்தினால் குற்ற வழக்குகளையும் இவரே சேர்த்து பார்க்கும் நிலை உள்ளது.

இதேபோல், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பணிபுரிந்த சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் வேலு வேப்பேரி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அப்போது குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த ஜானகிராமன் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியமர்த்தப்பட்டார். அன்றுமுதல் புளியந்தோப்பு குற்றப்பிரிவுக்கு தனி இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படாமல் ஜானகிராமனே கூடுதலாக அதனை கவனித்து வருகிறார். எம்கேபி நகர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக அம்பேத்கர் உள்ளார். பல மாதங்களாக இந்த காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணி காலியாக உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் இதனை கூடுதலாக கவனித்து வருகிறார்.

வியாசர்பாடி காவல் நிலையத்திலும் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சதீஷ் கூடுதலாக குற்றப்பிரிவை கவனித்து வருகிறார்.  இதன் மூலம் குற்றப்பிரிவில் ஆவணங்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதோடு, திருட்டு வழக்குகளை விசாரிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, புளியந்தோப்பு சரகத்தில் காலியாக உள்ள குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, பழைய வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: