சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நாளை கூடுகிறது மாமன்ற கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் நாளை கூடுகிறது. இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னை மாநகராட்சியில் மாதந்தோறும் மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில்  நடத்தப்படும். அந்த வகையில், இந்த மாதத்திற்கான மாமன்ற கூட்டம் நாளை நடக்கிறது. கடந்த மாதம் மாமன்ற கூட்டத்தில்  பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக, சொத்துவரி, நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு நடமாடும் கழிப்பறை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், நாளை கூடும் மாமன்ற கூட்டத்தில் மழைநீர் வடிகால் பணி, திருநங்கைகளை வைத்து நீர்நிலைகளில் மருந்து தெளிக்கும் பணி,  பருவ மழைக்கு முன்னரே சாலைகளை புதுப்பிக்கும் பணி போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது. இது தவிர்த்து சென்னை மாநகராட்சிக்குட்பட்ட  தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் தூய்மை பணியை ஒருங்கிணைத்து செயல்பட 8 உதவி செயற்பொறியாளர்கள் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் உள்ள  15  மண்டலங்களில் 1, 2, 3 ஆகிய மண்டலங்களுக்கு 1 உதவி பொறியாளர், 4, 5 ஆகிய மண்டலங்களுக்கு 1 உதவி பொறியாளர், 6, 7, 8 மண்டலங்களுக்கு 1 உதவி பொறியாளர், 9வது மண்டலத்திற்கு 1 உதவி பொறியாளர், 10, 11, 12 ஆகிய மண்டலங்களுக்கு 1 உதவி பொறியாளர், 13, 14, 15 ஆகிய மண்டலங்களுக்கு தலா ஒரு உதவி பொறியாளர் என மொத்தம் 8 உதவி பொறியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், மண்டல அளவில் நடைபெறும் பணிகள் குறித்தும், வார்டு குறைகள் குறித்தும் ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாமன்ற கூட்டத்தில் நடந்த காரசார விவாதங்கள் போல் இந்த மாமன்ற கூட்டத்திலும்  நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

Related Stories: