பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு

சென்னை: சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டலத்துக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்கியதன் காரணமாக சென்னையின் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியதோடு, புறநகர் பகுதிகளில் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்தது. இதையடுத்து, மழைநீரை அகற்றி இயல்பு நிலையை மீட்டு கொண்டு வர மண்டலத்துக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என 15 மண்டலத்துக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

அதன்பிறகு, சென்னை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டது. இந்நிலையில், கடந்த வாரம் தொடர்ந்து மூன்று நாட்கள் இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்தது. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் செயல்பட்டு நீர் தேங்கவிடாமல் நடவடிக்கை எடுத்தனர். மேலும், மழை வெள்ள பாதிப்புகளை தவிர்க்க, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.  இந்த பணிகள்  வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு பருவமழை கூடிய விரைவில் தொடங்க உள்ளதை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில்  மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கண்காணிக்கவும் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்ட அறிவிப்பு:

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் ஏற்படும் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க மண்டலம் வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி,  

மண்டலம் 1 - ஸ்ரவான் குமார் ஜதாவாத் (வேளாண் துறை கூடுதல் இயக்குனர்),  மண்டலம் 2 - கணேசன் (தமிழ்நாடு சாலை திட்டப்பணி II இயக்குனர்), மண்டலம் 3 - சந்தீப் நந்தூரி (சுற்றுலாத்துறை இயக்குனர்), மண்டலம் 4 - டி.ஜி.விநய் (ஆய்வு மற்றும் தீர்வுகள் இயக்குனர்),  மண்டலம் 5 - விஜயகார்த்திகேயன் (மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளர்), மண்டலம் 6 -  ரஞ்சீத் சிங் (கால்நடைத்துறை கூடுதல் செயலாளர்),  மண்டலம் 7- சுரேஷ் குமார் (சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர்), மண்டலம் 8 - எஸ்.பழனிசாமி (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர்), மண்டலம் 9 - ராஜாமணி (தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண் இயக்குனர்), மண்டலம் 10 - விஜயலட்சுமி (வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை கூடுதல் செயலாளர்), மண்டலம் 11 - மணிகண்டன் (பள்ளிக்கல்வித்துறை இணை செயலாளர்), மண்டலம் 12 - நந்தகோபால் (டாப்செட்கோ மேலாண்மை இயக்குனர்), மண்டலம் 13 - நிஷாந்த் கிருஷ்ணா (சிப்காட் நிர்வாக இயக்குனர்), மண்டலம் 14 - ரவிச்சந்திரன் (மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலர்), மண்டலம் 15 - வீரராகவராவ் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர்) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து, தடுப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு, தகவல் தொடர்பு, மீட்பு நடவடிக்கைகள், வெள்ளநீரை அகற்ற மோட்டார் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது,  சீரான போக்குவரத்தை உறுதி செய்தல்  போன்ற பணிகளுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: