ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊருக்கு சென்றுள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் இன்று ஆலோசனை: ஓபிஎஸ்சின் பொருளாளர் பதவியை பறிக்க திட்டம்?

சென்னை: எடப்பாடி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை, கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஓபிஎஸ் சொந்த ஊரில் இருக்கும்போது இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த இரு வாரங்களுக்கு முன் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்தது. அப்போது, எடப்பாடி ஆதரவாளர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். இதற்கு ஓபிஎஸ் தரப்பில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இந்த பரபரப்புக்கு இடையே கடந்த 23ம் தேதி சென்னை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என கூறப்பட்டது.

 பல தடைகளுக்கு பின் நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்டு, தாக்கப்பட்டார். இதனால், அவரது ஆதரவாளர்கள் ஓபிஎஸ் வெளிநடப்பு செய்தார். அதிமுகவின் 50 ஆண்டு கால வரலாற்றில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, அவர் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு மீண்டும் கூட்டப்படும் என்று அறிவித்தார். அன்றைய தினம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று மாஜி அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தங்களது  இல்லங்களில் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். பெரும்பாலான மாவட்ட  செயலாளர்கள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்ததால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திகைத்து நின்றனர். இந்நிலையில், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை  மற்றும் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடியை  தனித்தனியாக சந்தித்தனர். இந்த சந்திப்பிற்கு பின்னர் அன்றைய தினம் இரவே  தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டு  சென்றார். பின்னர், டெல்லியில் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து முக்கிய  தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. சென்னை திரும்பிய ஓபிஎஸ், டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்தார்.

இதற்கிடையே, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் 5 ஆண்டு உள்ளது. எனவே, சட்ட விதிகளில் மாற்றம் செய்ய முடியாது என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த இபிஎஸ் ஆதரவாளர் சி.வி.சண்முகம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டது. பொருளாளர் மற்றும் தலைமை நிலைய செயலாளர் பதவிகள் மட்டுமே உள்ளது என்று கூறியிருந்தார். ஆனால் ஓபிஎஸ் தரப்பினர்  ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லும் என கூறி வருகின்றனர்.

பொருளாளர் பதவியை ஓபிஎஸ் வைத்துள்ளதால், அதையும் பறித்து விட்டால், அவர் பல் பிடுங்கிய பாம்பாக மாறி விடுவார் என்று இபிஎஸ் அணியினர் திட்டமிட்டு வருகின்றனர். இதனால், ஜூலை 11ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் ஓபிஎஸ்சின் பொருளாளர் பதவியை காலி செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்த அதிமுக நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.  ஆனால், கட்சியில் உள்ள புதிய நிர்வாகிகளை நியமிப்பது, நீக்குவது போன்ற நடவடிக்கைகளை செய்ய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. தற்போது, எடப்பாடி கட்சி நிர்வாகிகள் ஆதரவுடன் ஓபிஎஸ்சை காலி செய்ய திட்டமிட்டுள்ளது செல்லுபடியாகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.  

எடப்பாடி தனக்கு ஆதரவாக நிர்வாகிகளை திரட்டி வரும் நிலையில், ஓபிஎஸ் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்திக்க நேற்று சொந்த ஊரான தேனிக்கு சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  அங்கிருந்து தொண்டர்கள் புடைசூழு தேனிக்கு சாலை மார்க்கமாக சென்றார். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இரண்டு தரப்பினரும் தங்களது பலத்தை நிரூபிக்க தொடங்கி உள்ள போட்டி யுத்தத்தால், இபிஎஸ் ஆதரவாளர்கள், கட்சி அலுவலகம்,  போஸ்டர், பேனர், சுவர் விளம்பரங்களில் இருந்த ஓபிஎஸ் படம் மற்றும் பெயரை  அழித்து வருகின்றனர். பதிலுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்களும் இபிஎஸ் பெயரை அழித்தனர்.  அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’ பத்திரிகையின்  நிறுவனர்கள் பெயரில் இருந்த ஓபிஎஸ் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து தலைமை நிலைய செயலாளர் அறிவிப்பு என்ற பெயரில் ஓர் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 27.6.2022  திங்கட் கிழமை (இன்று ) காலை 10 மணிக்கு, தலைமைக் கழகம் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறப்பட்டுள்ளது.

தலைமை அலுவலக அறிவிப்பை தொடர்ந்து, சொந்த ஊருக்கு சென்று இருந்த நிர்வாகிகள் அவசர அவசரமாக நேற்று மாலையே சென்னை திரும்பினர். இன்று நடைபெறும் கூட்டத்தில், ஆதரவாளர்களை  ஓபிஎஸ் சந்தித்து வருவது, வரும் 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்துவது, மாவட்டம்  தோறும் பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள்  குறித்து எடப்பாடி ஆலோசனை நடத்துகிறார். எடப்பாடி பழனிசாமி நேற்று சொந்த  ஊர் செல்வதாக இருந்தது. ஆனால், ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து அவர் அனைத்து  நடவடிக்கைகளையும் ஒத்திவைத்துள்ளார்.

பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வரை எப்போதும் தலைமை கழகம் சார்பில் அறிவிப்போ, கட்சி நிர்வாகிகள் மீதான நடவடிக்கையோ என எதுவாக இருந்தாலும், ஒருங்கிணைப்பாளர்  ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் பெயரில் அறிக்கை வெளியிடப்படும். ஆனால், பொதுக்குழுவில் ஏற்பட்ட பின், முதன் முறையாக யாருடைய பெயர் இல்லாமல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தலைமை நிலைய செயலாளர் என்பது எடப்பாடி பழனிசாமிதான். ஆனால், அவரது பெயரை வெளியிடாமல், பதவியை மட்டுமே வெளியிட்டு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நடக்கும் இந்த கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் என்று கூறப்படுகிறது.  ஓபிஎஸ் சொந்த ஊருக்கு சென்றுள்ள நிலையில், தனிப்பட்ட முறையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை எடப்பாடி தலைமை அலுவலகத்தில் கூட்டி உள்ளது புதிய பிரச்னையை உருவாக்கி உள்ளது. அதே நேரத்தில் சசிகலாவும் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா ஆகியோருக்கு இடையே நடைபெறும்  ஒற்றைத்தலைமை விவகாரம் அதிமுக இரண்டு அல்லது மூன்றாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ் நாளை வருகை

டெல்லியில் இருந்து தமிழகம் வந்துள்ள ஓபிஎஸ் நாளை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் அவர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐகோர்ட்டில் மனு

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு மீண்டும் கூடும் என்று அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார். ஆனால், ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவை கூட்ட முடியாது என்று ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதை எதிர்த்து இன்று ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளனர். இதையறிந்தே இபிஎஸ் தரப்பில் ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

சசிகலா குறித்து முக்கிய பேச்சு

இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், சசிகலாவின்  பிரசார பயணம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  திருத்தணியில் தனது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை சசிகலா நேற்று  சந்தித்தார். அப்போது, சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா என்ற பதாகைகளும், கோஷங்களும்  எழுப்பப்பட்டது.

Related Stories: