நந்தனம் முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து தலைமை செயலாளர் ஆய்வு

சென்னை: நந்தனம் முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் குறித்து நந்தனத்தில் இருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பல்வேறு பயணிகளின் வசதிகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் வழித்தடம் நான்கில் ஒரு பகுதியான கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 26.1 கிலோ மீட்டர் பகுதியில் நடந்து வரும் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டார்.

இந்த வழித்தட பகுதியில் தெள்ளியகரம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் நடைபெறும் வழித்தட கட்டுமானம், கரையான்சாவடி நிலையத்திற்கு அருகில் நடைபெறும் அடித்தள தூண்கள் மற்றும் அதன் இணைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், கோலப்பஞ்சேரியில் அமைக்கப்பட்டுள்ள வார்ப்பு மைதானத்தில் ‘யு’ கர்டர், ‘ஐ’ கர்டர் மற்றும் தூண் மூடிகள் வார்ப்பதற்கு முந்தைய பணிகளை பார்வையிட்டார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டில் வழித்தடம் 4ல் கலங்கரை விளக்கத்திருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படுகிறது. போரூர் புறவழிச்சாலை மெட்ரோ முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ வரையிலான 7.94 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட வழித்தடங்களை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர்  பிரதீப் யாதவ், சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குனர் சித்திக், சென்னை  மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனர் (திட்டம்) அர்ஜுனன், பொது மேலாளர்கள் அசோக்  குமார், ரேகா பிரகாஷ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: