ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பயன்பாட்டிற்கு வராத ஆடு அடிக்கும் தொட்டி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆடு கோழி, மீன், நண்டு உள்ளிட்ட இறைச்சி பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் பேரூராட்சி பின்புறம் உள்ள இறைச்சி கடைகளுக்கு வரவேண்டும். இது மட்டுமல்லாமல் தாராட்சி, ஆலங்காடு, தாமரைகுப்பம், போந்தவாக்கம், பெரிஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு வந்து தான் இறைச்சி பொறுட்களை வாங்குவார்கள்.

அப்போது வியாபாரிகள் ஆடுகளை, வெட்ட வெளியிலேயே வெட்டி விற்பனை செய்து வந்தனர். அந்த நேரத்தில் வெட்டப்பட்ட ஆட்டின் ரத்தம் மக்கள் மீது சிதறியடித்தது.

இதை தவிர்க்க அப்போதைய கும்மிடிபூண்டி தொகுதி எம்எல்ஏ சி.எச்.சேகர் தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 லட்சத்தை ஒதுக்கியதில் நவீன ஆடு அடிக்கும் தொட்டி கடந்த 2012-2013ல் கட்டப்பட்டது. ஆனால் இது வரை ஆடு அடிக்கும் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும்  திறக்கப்படவில்லை. இதனால் தற்போது இறைச்சி கடை வியாபாரிகள் வெட்ட வெளியிலேயே ஆடுகளை வெட்டி விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், `அப்போதைய எம்எல்ஏ சேகர் ஒதுக்கிய நிதியில் கட்டிடம் மட்டுமே கட்ட முடிந்தது. ஆடு வெட்டுவதற்கான உதிரிபாகங்கள் வாங்க மேலும் ரூ.20 லட்சம் நிதி அரசால்  ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதி வந்த பிறகு விரைவில் பணிகள் தொடங்கும்’ என தெரிவித்தனர்.

Related Stories: