திருவள்ளூரில் சசிகலாவுக்கு வரவேற்பு

திருவள்ளூர்: திருத்தணியில் புரட்சி பயணம் தொடங்க வந்த சசிகலாவுக்கு திருவள்ளூரில் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் எடப்பாடி அணி சார்பில் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடத்த திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை திரட்ட முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், சசிகலா தனது புரட்சி பயணத்தை தொடர போவதாக ‘அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா’ என்ற அடைமொழியுடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதன்படி திருத்தணிக்கு திருவள்ளூர் வழியாக வேனில் சசிகலா ேநற்று வந்தார்.

அப்போது தமிழக அரசின் முன்னாள் கொறடாவும், திருத்தணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.எம்.நரசிம்மன் தலைமையில் திருவள்ளூர் உழவர் சந்தை அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சசிகலாவின் ஆதரவாளர்கள் வெள்ளைப் புறாவை பறக்க விட்டும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்றனர். இதில் முன்னாள் அரசு வழக்கறிஞர் மோகன்ராம், ஊத்துக்கோட்டை ரஜினிகாந்த், பூந்தமல்லி து.கந்தன் உள்ளிட்ட சசிகலாவின் ஆதரவாளர்கள் அதிமுக கொடியுடன் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்திக்க மறுத்த சசிகலா அங்கிருந்து புறப்பட்டு திருத்தணிக்கு சென்று கோயிலில் தரிசனம் செய்தார்.

Related Stories: