கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 100 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் ரூ.19 லட்சம் மதிப்பில் 100 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார். தமிழக அரசின் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கி, தொழில்முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் அறிமுக விழா நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், துணை இயக்குனர் கோபி, உதவி இயக்குனர் கோபிகிருஷ்ணன், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கேஎம்எஸ்.சிவகுமார், துணை தலைவர் மாலதி குணசேகரன், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன், ஒன்றிய ஆணையர் வாசுதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா, மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பேசுகையில், `திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசின் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 1,600 பெண் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கி தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின்கீழ், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 100 பெண் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 4 பெட்டை ஆடு, 1 கிடா என மொத்தம் 5 ஆடுகள் வழங்கப்படும். ஒரு பயனாளிக்கு ரூ.19,040 என மொத்தம் 100 பயனாளிகளுக்கு ரூ.19.04 லட்சம் மதிப்பில் விலையில்லா ஆடுகள் வழங்கப்படுகின்றன’ என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ஜி.ரவி, ஒன்றிய செயலாளர்கள் மு.மணிபாலன், செல்வசேகரன், தேவேந்திரன், எம்.ஆர்.ஸ்ரீதர் மற்றும் பல்வேறு ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: