திருவள்ளூர் நகராட்சியில் தீவிர தூய்மை பணி, விழிப்புணர்வு முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 10வது வார்டில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற அடிப்படையில் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு நகர் மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி கலந்துகொண்டு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்னர் 10வது வார்டுக்குட்பட்ட வேம்புலியம்மன் கோயில் தெரு, வீரண்ணன் தெரு ஆகிய தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து எவ்வாறு வழங்க வேண்டும் என பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதில் 10வது வார்டு உறுப்பினர் டி.கே.பாபு தலைமை வகித்தார். மக்கும் குப்பையை ஒரு கூடையிலும், மக்காத குப்பையை மற்றொரு கூடையிலும் பிரித்து வழங்க வேண்டும் என்பதற்காக 2 கூடைகளை பொதுமக்களுக்கு நகர் மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து வார்டு மக்களிடம் தூய்மைக்கான உறுதி மொழியையும் எடுத்துக் கொண்டனர். அப்போது என் நகரம், என் பெருமை. என் நகரத்தை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமை. பொது இடங்களில் குப்பையை கொட்டாமல் இருப்பதே நகரத் தூய்மைக்கான முதற்காரணம் என்பதை நான் நம்புகிறேன்.

நான் பொது இடங்களில் குப்பையை கொட்டமாட்டேன். பிறரையும் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டேன். குப்பையை வீட்டிலேயே தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைப்பேன் என ஆணையர் ராஜலட்சுமி உறுதி மொழி வாசிக்க அதனை பொதுமக்களும் திரும்ப சொல்லி உறுதியேற்றனர். இந்த விழிப்புணர்வு முகாமில் முன்னாள் நகர் மன்றத் தலைவர் பொன்.பாண்டியன், சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ், தூய்மை இந்திா திட்டத்தின் மேற்பார்வையாளர் ரவி உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டு 10வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: