சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி அடிப்படை வசதிகள் குறித்து ஒருங்கிணைப்பு அலுவலர் ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதால், அங்கு அடிப்படை வசதிகள் குறித்து போட்டி ஒருங்கிணைப்பு சிறப்பு அலுவலர் ஆய்வு செய்தார். மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ரிசார்ட்டில் ஜூன் மாதம் 27ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக, 187 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர். 2,500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர். அதற்காக, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் அடிப்படை வசதிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி ஒருங்கிணைப்பு சிறப்பு அலுவலர் சங்கர் நேற்று போட்டி நடக்கும் இடத்துக்கு நேரில் வந்து வாகன நிறுத்துமிடம், கழிப்பறை கட்டும் இடம், புதிதாக அமைக்கப்பட்டு வரும் அரங்கம், புதிதாக சாலை அமைக்கும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, சாலை அமைக்கும்போது மரங்களை அகற்றாத வகையில் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, சென்னை - புதுச்சேரி இசிஆர் திட்ட நிலம் எடுப்பு டிஆர்ஓ நாராயணன்,  திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ரகு, மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், விஏஓ முனுசாமி, துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, சர்வேயர் ராமராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: